சென்னையில் பிரபல பள்ளியில் நடந்த பாலியல் தொல்லைக்கு எதிராக பிரபல நடிகர் விஷால் குரல் எழுப்பிய நிலையில் தற்போது அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார் பாஜகவை சேர்ந்தவரும் நடிகையுமான காயத்திரி ரகுராம். தனியார் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களிடம் பாலியல் ரீதியிலான துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆசிரியர் ராஜகோபால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அது தொடர்பாக நடிகர் விஷால் கருத்து தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து விஷால் வெளியிட்ட அறிக்கையில் 'ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ள சம்பவம் எனக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பள்ளியை மூடுவதே சிறந்த முடிவாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இதுவரை ஒருவர் கூட பாதிக்கப்பட்ட மாணவர்களிடமோ அல்லது அவர்களின் பெற்றோரிடமோ மன்னிப்பு கேட்கவில்லை. இது போன்ற குற்றங்கள் மிக கடுமையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
என் நண்பர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் வருங்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் கடுமையான நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன். சிலர் இதை ஒரு மதவாத பிரச்சனையாக மாற்ற நினைப்பது இழிவான செயல். மாணவர்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நபர் தூக்கிலிடப்பட வேண்டும். அதன் மூலம் இந்த குற்றம் எந்த அளவு உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை என்பதை அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.' என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நடிகர் விஷால் மீதே பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் காயத்திரி ரகுராம். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் 'முதலில் சினிமாத்துறையில் நடக்கும் தவறுகளை பாருங்கள். புதுமுக நடிகைகள் மற்றும் முன்னணி நடிகைகளுக்கு நடக்கும் துன்புறுத்தல்களை கவனியுங்கள். பயன்படுத்திவிட்டு தூக்கியெறியும் பழக்கம் உங்களிடமும் உங்கள் நண்பர்களிடமும் உள்ளது. உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.' என்று கூறியுள்ளார் காயத்திரி ரகுராம் . கவிஞர் வைரமுத்து-சின்மயி மீடூ விவகாரம் மீண்டும் வெடித்து பூதகரமாக உலாவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ள கருத்து, மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.