Mansoor Ali Khan: சர்ச்சை கருத்து பேசிய விவகாரத்தில் நடிகை த்ரிஷாவிடம் தான் மன்னிப்பு கேட்கவில்லை என்று மன்சூர் அலிகான் மறுப்பு தெரிவித்துள்ளார். 

 

இது தொடர்பாக மன்சூர் அலிகான் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ”அடக்க நினைத்தால் அடங்கமறு...திரை நாயகி த்ரிஷா என்னை மரணித்து விடு என கூறினேன். தொலைபேசியில் மரணித்து விடு என்று கூறியதை எனது பிஆர்ஓ என்னை மன்னித்து விடு என தவறாக புரிந்து கொண்டார். அந்த அதிர்ச்சியில் இருந்து நானே மீள முடியவில்லை. உடனே மறுப்பு சொன்னால் அது தவறாகிவிடும். அதனால், நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து விட்டேன்” என்றார். 

 

இந்த பிரச்சனையில் என்கிட்ட இது தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் வரை யாருமே எதுவும் கேட்கவில்லை. நான் என்னுடைய தரப்பு நியாயத்தை சொல்ல எவ்வளவோ முயன்றேன். டெலிட் செய்த அந்த வீடியோவை வெளியிட்டதால் மக்கள் புரிந்து கொண்டனர். இது தொடர்பாக என்னை யாரெல்லாம் காயப்படுத்தினார்களோ அவர்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன்” என்றும் கூறியுள்ளார். 

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷாவுடன் நெருக்கமான காட்சிகள் இல்லை என கூறியதாக வீடியோ வெளியானது. அதனால் கோபமடைந்த த்ரிஷா மன்சூர் அலிகானிற்கு கண்டனம் தெரிவித்ததுடன், இனி அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என கூறினார். த்ரிஷா, மன்சூர் அலிகான் பேச்சு வைரலான நிலையில், நடிகை குஷ்பு, சிரஞ்சீவி உள்ளிட்ட பலர் மன்சூர் அலிகானிற்கு எதிராக குரல் கொடுத்தனர். இதற்கிடையே அநாகரீகமாக பேசியதாக மன்சூர் அலிகான் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 

மன்சூர் அலிகானும் நேரில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை போலீசாருக்கு அளித்தார். பின்னர், த்ரிஷாவிடம் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேப்டதாக அவரது தரப்பில் அறிக்கை வெளியானது. இதோடு பிரச்சனை முடிந்தது என்ற நிலையில், த்ரிஷாவின் தான் மன்னிப்பு கேட்கவில்லை என கூறி ஷாக் கொடுத்துள்ளார். 

 

முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட மன்சூர் அலிகான்,  குஷ்பு, த்ரிஷா, சிரஞ்சீவி ஆகியோர் மீது மானநஷ்ட வழக்கு, நஷ்டஈடு வழக்கு, கிரிமினல் மற்றும் சிவில் சூட், திட்டமிட்டு கலவரம் உண்டு பண்ண, பொது அமைதியை 10 நாட்களாக கெடுத்து, மடைமாற்றம் செய்ய தூண்டிய அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். தன்னுடைய பேச்சை விஷமிகள் தவறாக எடிட் செய்து சமூக வலைதளத்தில் பரப்பி விட்டுள்ளதாகவும், தான் தவறான நோக்கத்தில் பேசவில்லை என்றும் கூறியிருந்தார்.