நடிகர் மன்சூர் அலிகான் தயாரித்து, நடித்துள்ள திரைப்படம் ‘சரக்கு’. போதைக்கு அடிமையாகும் பிரச்னையை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நாஞ்சில் சம்பத் இந்தப் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ஜெயக்குமார். ஜெ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். சித்தார்த் விபின் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.


இப்படம் முன்னதாக தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட நிலையில், படத்தைப் பார்த்து ஏராளமான காட்சிகள், வசனங்களை நீக்க சொல்லியுள்ளது தணிக்கை வாரியம். இதனால் அப்செட்டான மன்சூர் அலிகான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:


‘சிங்களவன்னு போடக்கூடாது என்கிறார்கள்’


“காவாலா பாட்டில் தமன்னா கையை நீட்டி கவர்ச்சியாக ஆடுவார். நான் அப்படி எதுவும் எடுக்கவில்லையே என்றால், இல்லைண்ணே அது வேற படம்  என்கிறார்கள். “சிங்களவன சுட்டுக் கொன்னான் பாரு” என பாடலில் வந்தால், சிங்களவன் என சொல்லக்கூடாது என சொல்கிறார்கள்.  அதுலயே இன்னொரு இடத்தில் கூடங்குளம் என வருகிறது. “கூடங்குளத்தில் சுட்டவன் எல்லாம் ஜாலியா சுத்தறான் பாரு” என வரி வருகிறது.  ஆனால் நீங்க போடுங்க கூடங்குளம் என போடாதீங்க என்கிறார்கள்.


சினிமா என்பது என்ன? கருத்து சுதந்திரம் என்பது இருக்கால் இல்லையா. மக்களை போய் சேர வேண்டுமில்லையா? கூடங்குளத்தில் சுட்டுத்தள்ளுனவனுக்கு தண்டனை கிடைச்சதா? கேட்பது நம்ம கடமையா இல்லையா?


‘இப்படி பண்ணா எப்படி படம் எடுக்கறது..’


ஈவிஎம் மெஷின் வச்சு சின்ன தேர்தல் நடப்பது போல் காட்சி இருக்கும், நீங்க ஈவிஎம் மெஷின் வச்சது தெரியாதா என ஒரு வசனம் இருக்கும். அது இருக்கக்கூடாது என்கிறார்கள். அமெரிக்காவில் அவ்வளவு பெரிய வளர்ந்த நாட்டிலேயே ஈவிஎம் மெஷினை ஒழித்துவிட்டு பேப்பரில் ஓட்டு போடுகிறார்கள். சாயங்காலம் எண்ணுகிறார்கள். முடிவ சொல்லிட்டு போகிறார்கள். ஒரு மாநிலம் ஒரே நாளில் அறிவித்துவிட்டுப் போகிறது. ஈவிஎம் பற்றி பேசவே கூடாது என்கிறார்கள்.


மாநில அரசில் நடக்கும் போதை, அதில் இருந்து மீட்க வேண்டும் என்பது தான் படம். ஒரு முதல்வரா நரேன் நடித்திருக்கிறார்கள். படத்தில் முதல்வர நீதிமன்றத்துக்கே வரவழைக்கிறோம். கதாநாயகி போட்ட வழக்குப்படி சாட்சி சொல்றாங்க. ரொம்ப சரியா காமிச்சிருக்கோம், மாநில அரசு நீங்க என்ன வேண்டுமானாலும் பண்ணுங்க. எங்கள கை தொடாதீங்க என்பது போல் நடந்துக்கறாங்க.


ஈவிஎம், ஜங்லி ரம்மி


தணிக்கை இவ்வளவு கட்டுப்பாடு விதிச்சா எப்படி படம் எடுப்பது? நான் எங்கும் நிதி வாங்காமல் சொந்தக் காச கோடிக்கணக்குல போட்டு படம் எடுத்து இருக்கேன். லியோ படத்துக்கு முன்னாடியே இந்தப் படம் வெளியாக வேண்டியது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் தாமதமாகிடுச்சு. ஒரு கதாபாத்திரத்திடம் படத்தில் ஜங்லி ரம்மி ஆடி செத்து போகாதீங்க என்று சொல்வேன். ஜங்லி ரம்மி என்று சொல்லக்கூடாது என்கிறார்கள்! என்ன கொடுமை இது? தணிக்கை துறை என்பது நியாயமா இருக்க வேண்டும்.


ஏதோ ஒரு சீனியர் நடிகர் விஷயம் தெரியாமல் அப்போ  நடிச்சிட்டாங்க. அனால் அப்பட்டமா மக்களோட ரத்தத்த உறிஞ்சி காச புடுங்கறாங்கனு தெரியுது. அத எதிர்த்து குரல் கொடுக்க வேண்டியது நம்ம வேலை. நான் சினிமா எடுக்கறேனா இல்லை சிரைக்க வந்தேனா?


டாஸ்மாக்கா வேஸ்ட்மாக்கா..


தமிழ்நாடு ஸ்டேட் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் அப்படினு போர்டு இருக்கு. ஆனால் டாஸ்மாக்னு சொல்லாதீங்கனு சொல்றாங்க. அப்போ வேஸ்ட்மாக்னா சொல்றதா? மத்திய அரச தொடாத, அதானி அம்பானி சொல்லாத, ஈவிஎம் மெஷின பத்தி சொல்லாத, கூடங்குளம் பத்தி பேசாத, சிங்களவன்னு சொல்லாதனு சொல்றாங்க. சென்சார் போர்டு நடுநிலையா இருக்கணும். விதிகள தளர்த்தணும். இதயெல்லாம் ஏத்துக்க முடியாதுனு நான் சொல்லிட்டு வந்துட்டேன்”