நாயகன் திரைப்படம் டிஜிட்டலில் மீண்டும் ரீரிலீசாக உள்ளதாக வந்துள்ள தகவல் கமல்ஹாசன் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


கல்ட் கிளாசிக் நாயகன்


கோலிவுட்டின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987ஆம் ஆண்டு வெளியாகி தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக உருவெடுத்த திரைப்படம் ‘நாயகன்’. நடிகர் கமல்ஹாசனுடன் நடிகை சரண்யா, நடிகர்கள் நிழல்கள் ரவி, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நடிகை கார்த்திகா நாசர் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்துக்கு இசையமைத்த நிலையில், பி.சி.ஸ்ரீராம் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.


நாயகன் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் தற்போது கடந்துள்ளது. தமிழ் சினிமா  தாண்டி இந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தும்,  மணிரத்னம் - கமல்ஹாசனின் சிறந்த படங்களில் ஒன்றாகவும் இன்றளவும் நாயகன் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது.


தேசிய விருதுகள்


சிறந்த நடிப்புக்காக நடிகர் கமல்ஹாசன், ஒளிப்பதிவுக்காக பி.சி.ஸ்ரீராம், கலை இயக்கத்துக்காக  தோட்டா தரணி என மூன்று தேசிய விருதுகளை நாயகன் படம் குவித்தது. மூன்றாம் பிறை படத்தைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக கமல் இப்படத்துக்கு  சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார்.


நடிகர் கமல்ஹாசனின் முத்திரை பதித்த வேலு நாயக்கர் கதாபாத்திரம் 35 ஆண்டுகள் கடந்து இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது நாயகன் படம் டிஜிட்டலில் ரீரிலீஸ் ஆக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பாக ஃபிலிமில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது ரீ மாஸ்டர் செய்யப்பட்டு டிஜிட்டலில் வெளியாக உள்ளது.


ரீரிலீஸ்


வரும் நவம்பர் 7ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது 69ஆவது  பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், நவம்பர் 3ஆம் தேதி நாயகன் டிஜிட்டலில் ரீரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டின் 120 திரையரங்குகளிலும், கர்நாடகாவில் 50 திரையரங்குகளிலும் நாயகன் படம் வெளியாக உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏற்கெனவே கமல் - அமலா நடித்த பேசும் படம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக உள்ளதாக இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்திருந்தது. மேலும், முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் கமல் நடித்த வேட்டையாடு விளையாடு திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 


மற்றொருபுறம் யூடிபில் கமல்ஹாசனின் ஹேராம் திரைப்படம் ராஜ்கமல் நிறுவனத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டு மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்து வருகிறது. நடிகர் கமல்ஹாசனின் பழைய படங்கள் இப்படி வரிசைக்கட்டி சிறந்த தரத்தில் வெளியாகி வருவது கமல் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.


KH234


அடுத்ததாக சுமார் 35 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது KH234 படத்தில் கமல்ஹாசன்  - மணிரத்னம் மீண்டும் இணைய உள்ளனர். முன்னதாக தென்னிந்தியாவை மையப்படுத்தி 'தெற்கின் எழுச்சி' என்கிற தலைப்பின் கீழ்  “ABP Southern Rising Submit 2023” என்ற பெயரில்  நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நடிகை சுஹாசினி KH234 பற்றிய சிறு அப்டேட் கொடுத்தார்.


அதன்படி, கூடிய விரைவில் KH234 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளதாகவும், தான் வெளியே சொல்லிவிடுவதாகக் கூறி படம் பற்றி தன் கணவர் மணிரத்னம் எதுவும் தன்னிடம் பகிர்வதில்லை என்றும் சுஹாசினி வேடிக்கையாக பகிர்ந்திருந்தார்.