12 வயதில் மேடையேறி அரை நூற்றாண்டு காலம் திரையுலகில் ஒரு அசைக்க முடியாத இடத்தை ஆளுமை செய்தவர் ஆச்சி என செல்லமாக கொண்டாடப்படும் நடிகை மனோரமா. மிக சிறந்த நடிப்பாற்றல், கணீர் குரல், தெளிவான வசன உச்சரிப்பு என பன்முக திறமைகள் கொண்ட மனோரமாவை குணச்சித்திர நடிகை, நகைச்சுவை நடிகையாக மட்டுமின்றி நவரசங்களின் நாயகி என்றே போற்றப்பட்டார். நடிப்பு மட்டுமின்றி அவரின் காந்த குரலால் பாடிய நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றும் ரசிகர்கள் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடித்தவை. எந்த காலகட்டமானாலும் மனோரமா ஏற்று நடித்த எண்ணற்ற கதாபாத்திரங்களில் ஒரு சில கதாபாத்திரங்கள் இன்றும் சிலாகிக்கப்படுகிறது.
ஜில் ஜில் ரமாமணி :
ஆச்சியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கிய படமாக விளங்குவது ‘தில்லானா மோகனாம்பாள்’. கதாநாயகனாக சிவாஜியும், கதாநாயகியாக பத்மினியும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்த படம் என்றாலும் அவர்களின் நடிப்புக்கு சற்றும் நான் சளைத்தவள் அல்ல என போட்டி போட்டு கொண்டு ஜில்ஜில் ரமாமணியாக மிக சிறப்பாக நடித்து பாராட்டுக்களை குவித்தவர். இன்றளவும் நகைச்சுவை நடிகையாக மனோரமாவின் புகழ் பற்றி விமர்சகர்களால் குறிப்பிடப்படும் கதாபாத்திரங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
கண்ணாத்தா - பாட்டி சொல்லை தட்டாதே :
பாண்டியராஜன், ஊர்வசி நடித்த இப்படத்தில் பணக்கார பாட்டியாக மனோரமா அடித்த லூட்டிகளை இன்று நினைத்தாலும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். படம் முழுவதும் பாட்டியின் ப்ரெசென்ஸ் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது. பேரனின் காதலுக்கு என்ன தடங்கல் வந்தாலும் அதை கடந்து எப்படி பாட்டி உதவுகிறார் என்பதை நகைச்சுவை கலந்து மிக சிறப்பாக நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் பாடிய 'டெல்லிக்கு ராஜா ஆனாலும் பாட்டி சொல்லை தட்டாதே' என்ற பாடல் இன்றும் நினைவில் நிற்கும் ஒரு பாடலாகும்.
அனந்த கற்பகவல்லி - நடிகன்:
சத்யராஜ் - கவுண்டமணி காம்போவில் காமெடி மற்றும் ஆக்ஷன் கலந்த ஒரு சூப்பர் ஹிட் படமான நடிகன் படத்தின் வெற்றிக்கு மனோரமாவுக்கு ஒரு முக்கியமான காரணம். வயதான வாத்தியாராக வேஷம் போட்டு வரும் சாத்யராஜை ஒரு தலையாக காதல் செய்யும் கதாபாத்திரமாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அதிலும் அவர் வெட்கப்பட்டு சத்யராஜுடன் பேசும் காதல் வசனங்கள் அப்பப்பா அவரை மிஞ்ச யாரலும் முடியாது.
பொன்னுரங்கம் அம்மா - கிழக்கு வாசல் :
நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான கிழக்கு வாசல் படத்தில் கார்த்திக்கின் அம்மாவாக மகனுக்காக குஷ்பூ வீட்டிற்க்கு சென்று பெண் கேட்கும் இடத்தில் அவமானப்படுவது பார்வையாளர்களையும் துக்கப்பட வைத்து. அவமானம் தாங்காமல் அவர் உயிர் விடும் போது ரசிகர்களை கண்ணீரில் கரைய வைத்து.
கண்ணம்மா - சின்ன தம்பி :
ஒரு வெகுளித்தனமாக ஒரு மகனின் அம்மாவாக மகன் மீது பாசத்தை கொட்டும் ஒரு அம்மாவாக நடித்து இருந்தார் மனோரமா. மகனை காட்டிக் கொடுக்க கூடாது என்பதற்காக போராடும் போது விதவையாக இருந்தவரை பூவும் பொட்டும் வைத்து ஒரு பைத்தியத்தை வைத்து தாலி கட்ட வைக்கும் தருணத்தில் மிகவும் அருமையாக யதார்த்தமான உணர்வை வெளிப்படுத்தியிருந்தார் மனோரமா.
ஆத்தா - சின்ன கவுண்டர் :
இப்படத்தில் அவரின் தோற்றத்திலேயே அத்தனை யதார்த்தம் இருந்தது. நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் என்றாலும் மிகவும் கனமான ஒரு ரோலில் நடித்திருந்தார். தெற்றுப் பற்கள் வைத்த அவரின் சிரிப்பு ஒரு ஹைலைட்டாக இருந்தது.
கண்ணம்மா - சம்சாரம் அது மின்சாரம் :
'நீ கம்முனு கிடா' இந்த வசனத்தை அந்த காலகட்டத்தை சேர்ந்தவர்களால் நிச்சயம் மறக்க முடியாது. பிரிந்த விசுவின் குடும்பத்தை சேர்த்து வைக்கும் வேலைக்காரியாக அசால்ட்டாக நடித்திருந்தார். அவரின் உடல் மொழியையும் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு ஏற்றபடி மாற்றி கொள்வதில் கை தேர்ந்தவர்.
கங்கா பாய் - மைக்கேல் மதன காமராஜன் :
ரூபிணியின் அம்மாவாக கங்கா பாய் என்ற கதாபாத்திரத்தில் நடித்த மனோரமா மகளை பணக்காரர் ஒருவருடன் சேர்த்து வைத்து விட வேண்டும் என்பதற்காக ரொமான்ஸ் சொல்லி கொடுக்கும் காட்சிகள் அடி தூள். ஹீரோயின் அம்மாவா அல்லது பொண்ணா என்பது தெரியாத அளவிற்கு அத்தனை அம்சமாக நடித்து 'சிவராத்திரி... தூக்கம் போச்சு...' பாடலுக்கு நளினமாக ஆடி காட்டுவார்.
அங்கயற்கண்ணி - உன்னால் முடியும் தம்பி :
ஜெமினி கணேசன் மருமகளாக பின்னிப் பெடலெடுத்த படம். மாமனாரையும், கொழுந்தனையும் விட்டுக்கொடுக்காமல் அற்புதமாக மனோரமா நடித்த படம். பாலச்சந்திரன் அற்புதமான படைப்புகளில் இதுவும் ஒன்று.
நாட்டாமை :
சரத்குமார், குஷ்பூ, மீனா நடிப்பில் வெளியான இப்படத்தில் வில்லன் பொன்னம்பலத்தின் அம்மாவாக நடித்திருப்பார் மனோரமா. கிளைமாக்ஸ் காட்சியில் மகனையே கொலை செய்யும் காட்சியில் சென்டிமென்டலாக வெகு சிறப்பாக நடித்திருந்தார் மனோரமா.
தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்களாக விளங்கிய எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்களின் காலகட்டமானாலும் ரஜினி, கமல் மட்டுமின்றி விஜய், அஜித் காலகட்டத்திலும் மனோரமா தனது நடிப்பு முத்திரையை பதித்தவர். அவர் என்றுமே ஈடுசெய்ய முடியாத ஒரு தனித்துவம் வாய்ந்த ஒரு நடிகை. அவரின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றின் மூலம் இன்றும் நமது நெஞ்சங்களில் குடி கொண்டுள்ளார்.