நாத்திக கருத்துக்களில் இருந்து எதிர்காலத்தின் மீதான பயம் காரணமாக மீண்டும் ஆன்மிகத்துக்கே திரும்பியதாக தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் மனோபாலா.


நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர்  மனோபாலா. 1982-ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான மனோபாலா , அடுத்தடுத்து பல படங்களில் இயக்குநராக களம் கண்டவர். இதுவரையில்  40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சித் தொடர்களையும் இயக்கியுள்ளார். இது தவிர 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மனோபாலா ஒரு சிறந்த வீணை வாசிப்பாளரும், ஓவியரும் கூட. இயக்குநராக வேண்டுமானால் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டாக வேண்டும் என நினைத்ததாக கூறும் மனோபாலா , தன் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களை பகிர்ந்திருக்கிறார்.





"நாளைக்கு காலையில நீ உயிரோட இருக்க கூடாதுன்னு கவுளி கத்தும் , சூனியம் வச்ச மாதிரி துரத்தும் அதிலிருந்து தப்பிச்சு தப்பிச்சு ஓடு வருவதுதான் திரையுலகம். எனக்கு கடவுள் பக்தி ரொம்ப அதிகம் . கையில காசு இல்லாத சமயத்தில் நான் தற்கொலை முடிவு எடுத்துட்டு , திருச்சி வெக்காளியம்மன் கோவிலுக்கு போனேன். அங்க  மனதில் உள்ளதை எல்லாம் கடிதமாக எழுதி கோவில்ல கட்டிட்டு, சென்னை வந்து இறங்கும்பொழுது 1 ரூ 20 பைசா இருந்துச்சு. அதில் 1 ரூபாய்க்கு  ஒரு தோசை வாங்கி , நிறைய சாம்பார் ஊத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். அப்போ ஒரு  கார் வந்து நின்றது. "டைரக்டரே எப்படி இருக்கீங்க?” அப்படினு  ஒரு குரல் வந்ததும் நான் ஷாக் ஆகிட்டேன். கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கிருச்சு. அவர்தான் கலைமணி அவர்கள் . அடுத்த படம் பிள்ளை நிலா நீங்கதான் இயக்கணும்னு சொல்லி அட்வான்ஸ் கொடுத்தாரு. அந்த 50 ரூபாயை இன்னும் வெச்சிருக்கேன்.  


பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தேன். இப்போ நடக்குற பாருங்க சமுதாய பிரச்சனை அப்போதும் இருந்தது. எல்லோரும் பாரதிராஜாவிடம், அவன்கிட்ட ஜாக்கிரதையா இரு! அவனை சேர்த்தா உனக்கு ஆபத்துன்னு சொன்னாங்க. ஆனால் அதையும் தாண்டி என்னை பாரதிராஜா சேர்த்துக்கிட்டாரு. அப்படி சொன்னவங்க நிறைய பேர் இருக்காங்க.  அதனை விளக்கும் வகையிலத்தான் அலைகள் ஓய்வதில்லை படத்தை எடுத்தோம்.


சாதியை ஒழிக்க பூணூலையும், சிலுவையையும் அறுத்து போடுவதை விட வேறு வழி இல்லை என்பதை காட்டியவர்கள் நாங்கள்தான். அதற்கு சாட்சியாக பெரியாரை நினைத்து பூணூலை அறுத்து போட்டேன். கொஞ்ச காலம் அவர் வழியில்தான் இருந்தேன். அதன் பிறகு எதிர்காலத்தை நோக்கி பயம் வந்தது. அதனால் மீண்டும் ஆன்மீக வழிக்கே சென்றுவிட்டேன்" என்றார் மனோபாலா .