குணச்சித்திர நடிகரான மனோபாலாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடிகர் மனோபாலா மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மனோபாலா கல்லீரல் பிரச்சினை காரணமாக காலமானார். அவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்:
”திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிறந்த இயக்குநராக மட்டுமின்றி, அனைவரையும் மகிழ்விக்கும் நல்ல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராகவும் விளங்கிய அவரது மறைவு தமிழ்த்திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். சமீபத்தில் என்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு அமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு அவர் பாராட்டி பேசியது இந்தத் தருணத்தில் என் நெஞ்சில் நிழலாடுகிறது. மனோபாலாவின் மறைவால் அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர். திரையுலகினர், ரசிகர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மனோபாலா மறைவுக்கு “திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகரும், இயக்குனருமான திரு.மனோபாலா அவர்களின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிராதிக்கிறேன்.” என டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.