தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளரும், நகைச்சுவை  நடிகருமான மனோபாலா கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காலமானார். அவரது மரணம் திரையுலகிற்கு பேரிழப்பு என்று திரைப்பிரபலங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் அவரது ஆரம்ப காலம் முதல் இன்று வரை அவரைப் பற்றி நன்கு தெரிந்த அவரது திரையுலக குரு இயக்குநர் பாரதி ராஜா, இசைஞானி இளையராஜா மற்றும் அவரது இயக்கத்தில் இரண்டு படங்கள் நடித்த நடிகர் சத்யராஜ் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். அதில் இயக்குநர் இமயம் எனப் போற்றப்படுபவரான,  பாரதிராஜா கூறியுள்ளதாவது, ”என்னிடம் எவ்வளவோ உதவியாளர்கள் பணி புரிந்தனர். ஆனால் மனோ பாலா போல் ஓவியம் வரையக்கூடியவர் யாரும் இல்லை. மனோபாலா ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸில் படித்தவர். படப்பிடிப்புத் தளத்தில் எனக்கு பல ஆலோசனைகளை கூறியுள்ளார். மனோபாலாவின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நல்ல கலைஞன் நம்மிடையே இல்லை  என கூறும் போது மனது கனக்கிறது. மனது சுமையாக உள்ளது” என பாரதி ராஜா தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். மேலும், தான் தற்போது சென்னையில் இல்லை எனவும் நாளை காலை மனோபாலாவுக்கு நேரில் சென்று இறுதி மரியாதை செய்யவிருப்பதாகவும் கூறியுள்ளார். 


நினைவுகளைப் பகிர்ந்த இளையராஜா


இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றி அதன் பின்னர் இயக்குநராக மாற்றிக்கொண்டவர் மனோபாலா. ”என்னைப்பார்க்க கோடம்பாக்கம் பாலத்தில் எத்தனையோ இயக்குநர்கள் காத்துக்கொண்டு இருப்பார்கள். அப்படி என்னை பார்க்க காத்திருந்து பார்ப்பார். மேலும், என்னை அவ்வப்போது ரெக்கார்டிங் தியேட்டரில் சந்தித்து சினிமா மற்றும் சினிமாவைத் தவிரவும் அதிக விஷயங்களை என்னிடம் பகிர்வார். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திக்கிறேன்” என மனோபாலாவுடனான தனது நினைவுகளை இசைஞானி இளையராஜா பகிர்ந்துள்ளார். 


45 வருட பழக்கம் -  சத்யராஜ்


”நானும் மனோபாலாவும் ஒரே காலகட்டத்தில் சினிமாவிற்குள் வந்தவர்கள். அவரது இயக்கத்தில் பிள்ளை நிலா மற்றும் மல்லு வேட்டி மைனர் என இரண்டு படங்களில் நடித்துள்ளேன். மனோபாலாவின் மறைவு எனக்கு அதிர்ச்சியாக உள்ளது. மனோபாலாவின் குடும்பத்திற்கும் திரையுலகினருக்கும் எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.