தஞ்சாவூர் போலீசால் கொலை முயற்சி, பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல் உட்பட 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேடப்பட்டு வந்தவர், 19 ஆண்டுகளுக்குப் பின்பு, சென்னை விமான நிலையத்தில் கைது. பஹ்ரைனில் இருந்து விமானத்தில் வந்தவரை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்து, தஞ்சாவூர் போலீசில் ஓப்படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திராவிடமணி (43). இவர் மீது தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு போலீசில், 2004 ஆம் ஆண்டு ஜூலை மாதம், பயங்கர ஆயுதங்களுடன் சட்ட விரோதமாக கூடுதல், கொலைமுயற்சி, குற்றம் செய்ய துாண்டுதல் உட்பட 5 பிரிவுகளில், கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து தலைமறைவு
அந்த வழக்கில் கைது செய்வதற்காக, திராவிடமணியை போலீசார் தேடி வந்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து திராவிடமணியை, தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தார். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டிருந்தது. ஆனாலும் திராவிட மணி தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
19 ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி
இந்நிலையில் பஹ்ரைன் நாட்டில் இருந்து, கல்ப் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கம்ப்யூட்டர் மூலம் பரிசோதித்தனர். இந்த விமானத்தில் 19 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த திராவிட மணியும் வந்தார். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது திராவிடமணி, தஞ்சாவூர் மாவட்ட போலீசாரால் தேடப்படும், 19 ஆண்டுகள் தலை மறைவு குற்றவாளி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து திராவிட மணியை வெளியில் விடாமல், குடியுரிமை அதிகாரிகள் அவரை பிடித்து, ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு சென்னை விமான நிலைய போலீஸ்க்கு தகவல் கொடுத்து, திராவிட மணிக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. அதோடு தஞ்சாவூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு, குடியுரிமை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அதன் பெயரில் தஞ்சை மாவட்ட தனிப்படை போலீசார், திராவிட மணியை கைது செய்து தஞ்சாவூர் கொண்டு செல்வதற்கு, சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.