ஒரு காலத்தில் சமூக வலைதளங்களில் கொடி கட்டி பறந்தவர் மண்ணை சாதிக். பேஸ்புக் லைவ் மூலம் டிரெண்டாகி திரைப்படங்களில் நடிக்கும் அளவிற்கு வளர்ந்தவர்.தற்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறார்.‌அனைவரின் வாழ்க்கையிலும் கடினமான நேரத்தை ஏற்படுத்தியது லாக்டவுன். அதேபோல் இவரது கதையிலும் லாக்டவுன் தான் எதிரி. லாக்டவுனுக்கு பிறகு இவரது மீடியா சேப்டர் டவுன் ஆகிவிட்டது. சமீபத்தில் தனியார் சேனல் ஒன்றில் இவரது குடும்ப சூழ்நிலை குறித்து கண்ணீர் மல்க பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் கூறிய விஷயங்கள் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.‌ 


மீடியா என்ட்ரி & எக்சிட் :




குவைத்தில் டெலிவரி பாயாக வேலை செய்து வந்தாராம் சாதிக். ஓய்வு நேரங்களில் பேஸ்புக் லைவ் போட்டு வந்துள்ளார். அப்போது இவரை ஃபாலோவர்ஸ் திட்டுவதும் பதிலுக்கு இவர் திட்டுவதும் வழக்கமாய் இருந்து வந்திருக்கிறது.இப்படியே வைரலான இவர், சமூக வலைதளங்களில் இவர் இல்லாத இடமே இல்லை என்றளவுக்கு வளர்ந்துவிட்டார். பிறகு சினிமா வாய்ப்புகளும் கைகூடி வர 20 படங்கள் நடித்திருக்கார். ஆனால் அதில் 5 படங்களில் மட்டுமே இவர் நடித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விட்டுப்போன படங்களில் விஜய்யின் பிகிலும் சந்தானத்தின் A1 உம் ஒன்று. 2018 இல் ஆரம்பித்து 2020 வரை மீடியா தான் லைஃப் என்று இருந்த இவரது வாழ்க்கையில் வந்தது கொரோனா லாக்டவுன். கொரோனா காலம் அனைவருக்கும் கலியுகம் தான். சினிமாகாரர்களுக்கு சொல்லவே வேண்டாம். அதன் பிறகு பட வாய்ப்புகளும் பெரிதாக இல்லாமல் சமூக வலைதளங்களிலும் அவுட்டேட் ஆகிவிட்டார் சாதிக்.


மண்ணை சாதிக்கின் குடும்ப நிலை:


அவரது குடும்பம் பற்றி அவர் கூறுகையில், ''எனக்கு கல்யாணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளது. வீட்டு செலவுகளை கூட பார்த்துக் கொள்ள முடியவில்லை. நிறைய இழந்து இருக்கிறேன். எனக்கு பேஸ்புக்கில் லைவ் போட மட்டுமே தெரியும்.வெளிநாட்டில் இருந்து வந்த பிறகு 20 படங்கள் கிட்ட பண்ணி இருப்பேன். ஆனால் வெளிவந்த படங்கள் என்னவோ வெறும் ஐந்து தான். பிகில், ஏ1 ஆகிய படங்களில் நடித்திருந்தேன்.ஆனால் என் காட்சிகள் வெளியாகவில்லை. எனக்கு மட்டுமில்லை நிறைய நடிகர்களுக்கு இது நடந்துள்ளது. இதற்கு நான் மிகவும் வருத்தப்பட்டு அழுதேன். என் வாழ்வின் மிக சீரியஸான பக்கம் என்றால் லாக்டவுன் தான்.


வாழ்க்கை மிகவும் கீழே போய்விட்டது. நான் வெளிநாட்டில் இருந்த பொழுது நன்றாக சம்பாதித்தேன். மீடியாக்குள் வந்த பிறகு அப்படியே நிலை தலைகீழாய் மாறிவிட்டது. அம்மா அப்பாவுடன் சண்டை;அதனால்  சொந்த வீடு இருந்தும்  வாடகை வீட்டில் இருக்கிறேன். வீட்டிற்கு இடம் வாங்கிய லோனில் மாட்டிக் கொண்டிருக்கிறேன். என் வீட்டில் இருக்கும் பாதி பொருட்கள் டிவி சேனலில் வாங்கியதுதான். டிவி, மிக்ஸி என விஜய் டிவி, வசந்த் டிவி போன்றவைகள் பரிசளித்தவை. அதையெல்லாம் தான் வீட்டில் வைத்துள்ளேன். வீட்டில் டிவி பழுதாகி பழுது பார்க்க கூட காசு இல்லாமல் ஒரு வருடமாக அப்படியே இருக்கிறது.


நான் நல்லா சம்பாதித்து நன்றாக இருக்கிறேன் என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. சினிமா என்னை கொண்டு போகப் போகிறதா இல்லை திரும்பி ஃபாரின் போகப் போகிறேனா என்றே தெரியவில்லை.வாழ்க்கைப் போகும் போக்கில் போய்க்  கொண்டிருக்கிறேன்.குழந்தைகளின் சின்னச்சின்ன தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை'' என்கிறார் சாதிக்.  


வாழ்வின் நெகிழ்ச்சியான தருணம்: 




 என்னை நான் தியேட்டரில் பார்க்கும் பொழுது மிகவும் உற்சாகமாக இருந்தது. என் படம் ரிலீஸ் ஆனால் கமலா தியேட்டரில் தான் சென்று பார்ப்பேன். எனது சீன் வரும்பொழுது ரசிகர்கள் உற்சாகமாக கத்துவார்கள், அதை கேட்கும் பொழுது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. அதற்காகத்தான் நான் வாழ்கிறேன். லாக்டவுனுக்கு பிறகு, அதெல்லாம் இல்லாமல் போன பிறகு மிகவும் வருத்தம். மக்களின் மனது குரங்கு மாதிரி. ஒருவர் விட்டு ஒருவரை தாவிக்கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் என்னை தூக்கி வைத்தார்கள். இப்ப அடுத்தவர், அவருக்கு பிறகு அடுத்தவர். அப்படித்தான் இங்கு, யாருக்கும்  நிலை இல்லை. நான் லேடி கெட்டப் போட்டு நடித்த பொழுது என்னை கேலி செய்தார்கள்.ஆனால் இப்போ டிக் டாக் என்ற பெயரில் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது.


அதை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். ஏன் என்று தெரியவில்லை.அந்த காலத்தில் டிக் டாக் இல்லாத சமயத்தில் ஒரு ரெண்டு மூணு பேர் தான் இருந்தார்கள். நான் பாப்புலர் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை. நான் லைவ் போட்டேன் என்னை திட்டினார்கள் நான் திரும்பத் திட்டினேன். இவ்வளவுதான் நடந்தது. நான் பேமஸ் ஆகி விட்டேன். நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் பொழுது வீடியோ எடுத்து மண்ணை சாதிக் பிச்சை எடுக்கிறார், மண்ணை சாதிக்க மரணம் அடைந்தார் என வதந்திகளை பரப்புவார்கள். அவர்கள் தப்பான நோக்கத்துடன் செய்தாலும் எனக்கு அதனால் நிறைய பாலோவர்ஸ் மற்றும் நிறைய நபர்களின் பழக்க வழக்கம் கிடைத்தது.


மீடியாவை நம்பி வந்ததால் வாழ்க்கை க்ளோஸ்!


 இப்போது எனக்கு குடும்பம், குழந்தைகள், பசி… இவை மட்டுமே கண்ணுக்கு தெரிகிறது. நான் வெளிநாட்டில் இருந்தால் கூட இந்நேரம் வீடு கட்டி இருப்பேன். மீடியாவை நம்பி வந்ததால் நான் இன்று எல்லாத்தையும் இழந்து நிற்கிறேன். இந்த பக்கம் வராமல் இருந்திருந்தால், மார்க் பேஸ்புக் என்று ஒன்றை கண்டுபிடிக்காமல் இருந்திருந்தால்… நான் ஒழுங்காக சம்பாதித்து இருப்பேன். வீட்டிலும் அக்கம் பக்கத்திலும் எனக்கு நல்ல மரியாதை கிடைத்திருக்கும்.ஒரு படத்தில் சின்ன செக்மென்டில் தானே நடித்திருக்கிறாய் என்று என் வீட்டில் இருப்பவர்களே என்னை குறை கூறியுள்ளார்கள். நான் நடித்த எந்த படத்தையும் என் குடும்பத்தினர் தியேட்டரில் பார்த்ததே இல்லை.


காசு இல்லை என்றால் யார் தான் மதிப்பார்கள். என் பசங்க கேட்பதை கூட என்னால் வாங்கி தர முடியவில்லை. என் குழந்தைக்கு ஸ்கூல் பேக் வாங்குவது கூட என்னிடம் பணம் இல்லை. என் கஷ்டத்தை வெளியே சொன்னால் பிச்சை எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள். சமூக வலைதளத்தை பயன்படுத்தி உதவி கேட்கிறேன் என்று பழிபோடுகிறார்கள் என்று மிகவும் உருக்கமான பேட்டியை அளித்திருக்கிறார் மண்ணை சாதிக்.