மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. 

Continues below advertisement


கடந்த பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி மலையாளத்தில் “மஞ்சும்மல் பாய்ஸ்” என்ற திரைப்படம் வெளியானது. சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கிய உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் சௌபின் சாஹிர், தீபக் பரம்போல், ஸ்ரீநாத் பாசி, கலித் ரஹ்மான்,கணபதி,  ஜூன் பால் லால், சந்து சலிம்குமார், அபிராம் ராதாகிருஷ்ணன், அருண் குரியன், பாலு வர்கீஸ், ஷெபின் பென்சன், ஜார்ஜ் மரியன், ராமச்சந்திரன் துரைராஜ் என ஏகப்பட்ட பேர் நடித்திருந்தனர். 






தமிழ்நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு விடுமுறையை கழிக்க வரும் நண்பர்கள் அங்குள்ள தடை செய்யப்பட்ட குணா குகைக்குள் அத்துமீறி நுழைகின்றனர். அதில் ஒருவர் தவறி நூற்றுக்கணக்கான அடி ஆழம் கொண்ட குழிக்குள் தவறி விழுகிறார். அவரை மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியில் முடிவடைகிறது. இறுதியாக நண்பர்களில் ஒருவர் தன் உயிரை பணயம் வைத்து காப்பாற்றுவது தான் இப்படத்தின் கதையாகும். 






படம் மலையாளத்தில் எடுக்கப்பட்டாலும் தொடங்கிய சில நிமிடங்களிலேயே தமிழ்நாட்டுக்குள் கதை நகர்வதால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இப்படத்தை ரசித்து பார்த்தனர். அதுமட்டுமல்லாமல் கமல்ஹாசன் நடித்த குணா படமும், அதில் இடம் பெற்ற ‘கண்மணி அன்போடு” பாடலையும் சரியான இடத்தில் பொருத்தி வெற்றி கண்டார் இயக்குநர் சிதம்பரம் எஸ் பொதுவால். சுமார் ரூ.20 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் ரூ.236 கோடி வசூலித்து சாதனைப் படைத்தது. 


மலையாளம், தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வெளியாகி சக்கைப்போடு போட்டது. இப்படிப்பட்ட மஞ்சும்மல் பாய்ஸ் படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். அதன்படி இன்றைய தினம் ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது. நள்ளிரவு முதல் ஸ்டிரீமிங் தொடங்கிய நிலையில் ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் படத்தின் பல காட்சிகளையும் பகிர்ந்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.