மலையாளத்தில் கடந்த பிப்.22ஆம் தேதி வெளியான 'மஞ்சும்மல் பாய்ஸ்' (Manjummel Boys) திரைப்படம் தான் தற்போதைய 'டாக் ஆஃப் த டவுன்' திரைப்படம்.


கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரும் ஹிட் அடித்து, மல்லுவுட் தாண்டி கோலிவுட்டிலும் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற திரைப்படம் ‘பிரேமம்’. இந்தப் படத்துக்குக்குப் பிறகு அப்படி ஒரு சென்சேஷனை தமிழ்நாட்டில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்த்தியுள்ளது.


சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் உருவான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், செளபின் சாஹிர், ஸ்ரீநாத் பாஸி, மரியம் ஜார்ஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கொடைக்கானல் குணா குகையில் நடக்கும் சர்வைவல் த்ரில்லராக உருவாகியுள்ள மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் கண்மணி அன்போடு பாடலை உபயோகப்படுத்தி தமிழ்நாட்டிலும் லைக்ஸ் அள்ளி வருகிறது படக்குழு.


மேலும் கோலிவுட்டுக்கு இணையான ரசிகர்களை கமல்ஹாசன் - இளையராஜா இருவருமே மல்லுவுட்டிலும் கொண்டிருக்கும் நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் அமைந்திருக்கும் “கண்மணி அன்போடு” பாடல் இருவருக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்து இரு மாநிலங்களிலும் படம் பாராட்டுக்களை அள்ளி வருகிறது.


முன்னதாக தமிழ்நாட்டுக்கு வந்த மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழு, நடிகர் கமல்ஹாசன், அமைச்சர், நடிகர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்ட பலரையும் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் இணையத்திலும் பல செலிப்ரிட்டிகள் தொடங்கி ரசிகர்கள் வரை படம் பார்த்து தொடர்ந்து சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர்.


இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் படம் பார்த்து ரசித்த இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியுள்ளார். மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் அற்புதமாக இருக்கிறது, என்ன ஒரு சிறப்பான படம்! மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம். இந்தப் படத்தின் திரையரங்க அனுபவத்தை தயவு செய்து தவற விட்டுவிடாதீர்கள். சிதம்பரம், சௌபின் ஷாஹிர், சுஷின் ஷ்யாம் உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் என்னுடைய வாழ்த்துகள்” என கார்த்திக் சுப்புராஜ் பதிவிட்டுள்ளார்.


 






தமிழ் சினிமா ஆர்வலர்களால் சமீபத்தில் பெரிதும் கொண்டாடப்பட்ட ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் மஞ்சும்மல் பாய்ஸ் படக்குழுவை பாராட்டி பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது.