2024-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ், சூபபர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், குணா குகை மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.

ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ‘மஞ்சும்மல் பாய்ஸ்‘

கடந்த 2024-ம் ஆண்டு, இதே தேதியில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சும்மல் பாய்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழ் உட்பட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான இத்திரைப்படம், இந்தியா முழுவதிலும் ஹிட் அடித்து, பெரும் வசூலையும் வாரிக் குவித்தது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பரவா ஃபிலிம்ஸ் தயாரித்திருந்த இந்த திரைப்படத்தை, ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இத்திரைப்படம், 242 கோடி ரூபாயை வசூலை குவித்தது.

சிதம்பரம் எழுதி, இயக்கிய இந்த திரைப்படம், குணா குகையில் சிக்கிக்கொள்ளும் ஒருவரை, அவரது நண்பர்கள் எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.

குணா குகை மேக்கிங் வீடியோவை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்

மஞ்சுமல் பாய்ஸ் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுவதை ஒட்டி, அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா ஃபிலிம்ஸ், படத்தின் ப்ரொடக்ஷன் டிசைன், அதாவது தயாரிப்பு வடிவமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. குணா குகையில் எவ்வாறு செட் போட்டு காட்சிகள் படமாக்கப்பட்டது என்பதை விளக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளன.