மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்துக்கு விமர்சனம் அளித்த கையுடன் மலையாளிகள் பற்றி தரக்குறைவான கருத்துக்களை எழுத்தாளர் ஜெயமோகன் பகிர்ந்த நிலையில், இயக்குநர் நவீன் ஜெயமோகனை கடுமையாக சாடி பதிவிட்டுள்ளார்.


ஜெயமோகனின் சர்ச்சைக் கருத்து


தமிழ் சினிமாவில் மூடர் கூடம் திரைப்படம் மூலம் கடந்த 2013ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமாகி பெரிய அளவில் கவனமீர்த்தவர் நவீன்.  அதன் பின் பெரிய அளவில் திரைப்படங்களை இயக்காத நிலையில், மற்றொருபுறம் தொடர்ந்து அரசியல் களத்தில், பொதுத்தளங்களில் தன் கருத்துகளை ஆணித்தரமாக நவீன் முன்வைத்து வருகிறார்.


இதனிடையே சமீபத்தில் வெளியாகி தமிழ் - மலையாளத் திரையுலகங்களில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் குறித்து நேற்று பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கூறிய கருத்து கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 


மஞ்சும்மல் பாய்ஸ் படம் பற்றிய விமர்சனத்துடன், கேரளத்துப் பொறுக்கிகள், மலையாளப் பொறுக்கிகள் என்றெல்லாம் குறிப்பிட்டு மொழி, இனரீதியாகத் தாக்கும் வகையில் ஜெயமோகன் கருத்தினை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் “இப்படத்தில் வருபவர்கள் குடிப்பொறுக்கிகள். மலையாளிகள் எல்லா கேள்விக்கும் மலையாளத்திலேயே பதில் சொல்வார்கள், ஆனால் அவர்கள் மொழி பிறருக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்ற தெனாவெட்டு இருக்கும்.  இவர்கள் குடித்து வீசிய புட்டிகளால் யானைகள் கால் அழுகி இறக்கின்றன. இப்படத்தினைக் கொண்டாடுபவர்கள் நம்மூர் அரைவேக்காடுகள்” என்றெல்லாம் மிகக் கடுமையான விமர்சனத்தை ஜெயமோகன் முன்வைத்திருந்த நிலையில், ஜெயமோகன் மலையாளிகள் மீதான வன்மத்தை படம் பற்றிய விமர்சனம் எனும் பெயரில் கக்கியுள்ளதாக இணையத்தில் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.


மூடர்கூடம் நவீன் பதிவு


அந்த வரிசையில், மூடர் கூடம் நவீன் தற்போது ஜெயமோகனை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார். “'தமிழ் பொறுக்கிஸ்' என்று சொன்ன அந்த சங்கியும் (சுப்பிரமணியன் சுவாமி), 'மலையாளப் பொறுக்கிகள்' என்று சொல்லும் இந்த சங்கியும் ஒரே சாக்கடையில் ஊறும் இரண்டு தவளைகளே.


தமிழர்கள் - கேரளம் சென்றாலும், மலையாளிகள் தமிழ்நாடு வந்தாலும், அவர்கள் நம்மிடம் தமிழிலேயே பேசுகிறார்கள். குடிப்பொறுக்கிகள் உலகெங்கும் நிறைந்துள்ளனர்!” எனப் பேசியுள்ளார்.






நவீனின் இந்தப் பதிவு தற்போது கலவையான விமர்சனங்களைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.