யாரும் எதிர்பார்க்காத வகையில் தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சி மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளதாக நேற்று அறிவித்தது. இந்தநிலையில், இந்த அறிவிப்புக்கு பிறகு இன்று காலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொகுதி பங்கீடு தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். 


இந்தநிலையில், தமிழ்நாட்டில் பாஜகவுடன் இணைந்த பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எங்கெங்கு போட்டியிட வாய்ப்புள்ளது என்று இங்கு பார்ப்போம். (இது அதிகாப்பூர்வ தகவல் இல்லை)


பாமக போட்டியிடும் தொகுதிகள் ஒரு கணிப்பு:



  1. தர்மபுரி

  2. சேலம்

  3. விழுப்புரம்

  4. கடலூர்

  5. சிதம்பரம்

  6. மயிலாடுதுறை

  7. ஆரணி

  8. அரக்கோணம்

  9. ஶ்ரீ பெரும்பதூர்

  10. திண்டுக்கல்


என்ன சொன்னார் அன்புமணி ராமதாஸ்..?


சீட் ஒப்பந்தத்திற்கு பின் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில்,”தமிழகத்தில் மாற்றத்திற்காக நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துள்ளோம். 


கடந்த 57-58 ஆண்டுகளாக இரு கட்சிகள் தமிழ்நாட்டை ஆட்சி செய்து நாசமாக்கி விட்டன. இங்குள்ள தமிழ்நாட்டு மக்களும் நாமும் மாற்றத்தை விரும்புகிறோம். பிரதமர் மோடி மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராகி இந்தியாவை முன்னேற்றி கொண்டு செல்வார். பாமகவுக்கு தமிழ்நாட்டில் 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம் என்று நம்புகிறோம்.” என்றார். 


தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை கூறுகையில், "பலமான கூட்டணி. பாமக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்த பிறகு அரசியல் சூழல் மாறிவிட்டது. கோவையில் இருந்து தைலாபுரம் வந்தோம். இன்று சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இருவரும் கலந்து கொள்கின்றனர். அங்கு பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றுகிறார். பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


சேலம் பொதுக்கூட்டம்:


தொகுதி பங்கீட்டிற்குப் பிறகு, சேலத்தில் நடைபெறும் பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் பாமக தலைவர்களான அன்புமணி ராமதாஸ், ராமதாஸ் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சேலத்தில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் கலந்து கொள்ள தைலாபுரம் இல்லத்திலிருந்து தனி தனி கார்களில் புறப்பட்டனர். மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க பா.ம.க., நேற்று முடிவெடுத்தது. வேட்பாளர்களின் பெயர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை அறிவிப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பாஜக அதிமுக போன்ற பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தனித்து போட்டியிடுகிறது. இதற்காக மக்களவை தேர்தலுக்கு முன், பிரதமர் மோடியும் ஐந்து முறை தமிழகம் வந்துள்ளார். 


மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமை அறிவித்தது. மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்பட்டு, வருகின்ற ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது.  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) 400-க்கும் மேற்பட்ட இடங்களிலும், அதில், பாஜகவுக்கு மட்டும் 370-க்கும் மேற்பட்ட இடங்களிலும் வெற்றி பெற இலக்கு நிர்ணயித்துள்ளார் பிரதமர் மோடி.


விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக போட்டியிடுகிறதா பாமக..?


ஒரு வேளை மேலே குறிப்பிட்டுள்ள தொகுதிகளின்படி பாமக கட்சி போட்டியிட்டால், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு எதிரான கடுமையான போட்டியாக இருக்கும். திமுக கூட்டணியில் உள்ள விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும், சிதம்பரம் தொகுதியில் தொல். திருமாவளவனும் போட்டியிட உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த தேர்தலிலும் இதே தொகுதிகளில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.