தமிழில் தனக்கு பல படத்தின் வாய்ப்புகள் வந்தாலும் கால்ஷீட் தேதியால் தன்னால் நடிக்க முடியாமல் போனதாக நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். 

மலையாள திரையுலகின் ஆல் டைம் ஃபேவரைட் ஹீரோயின்களில் ஒருவரான மஞ்சு வாரியர் தமிழில் கடந்த 2019 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான “அசுரன்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான அஜித்குமாரின் துணிவு படத்தில் ஹீரோயினாக மஞ்சு வாரியர் நடித்து பெரிய வரவேற்பை பெற்றிருந்தார். 

இதனிடையே நேர்காணல் ஒன்றில் தனக்கு அசுரன் படத்துக்கு முன்னாள் ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்ததாகவும், அந்நேரம் மலையாளத்தில் பல படங்கள் ஹிட் ஆனதால் தன்னால் தமிழில் நடிக்க முடியவில்லை என்றும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார். இன்றைக்கும் எப்போது வேண்டுமானாலும் படங்களுக்கு என்னை அணுகலாம். யாரும் அணுக முடியாதவர்கள் மற்றும் தொடர்பு கொள்ள முடியாதவர்கள் என்று புகார் வருவதுமில்லை. நான் கேள்விப்பட்டதும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

சொல்லப்போனால் துணிவு படத்துக்கு முன் அஜித் நடித்த கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்த மீனாட்சி கேரக்டருக்கு முதலில் என்னை தான் அணுகினர். ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை எனவும் மஞ்சு வாரியர் கூறியுள்ளார். 

மாற்றங்களை கண்ட அஜித் படம் 

கடந்த 2000 ஆம் ஆண்டு ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் அஜித், ஐஸ்வர்யா ராய், தபு, அப்பாஸ், மம்முட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்த இப்படம் ரசிகர்களின் பேவரைட்டாக இன்றும் உள்ளது. இந்த படத்தில் ஒரு குடும்பத்தின் மதிப்பு, நாட்டோட மதிப்பு என இரண்டு விஷயங்களையும் இப்படத்தில் பேசியிருந்ததால் பெரிய வரவேற்பு கிடைத்தது. 

இந்த படத்தில் முதலில் ஹீரோவாக அஜித் வேடத்தில் நடிக்க பிரஷாந்தை தான் ராஜீவ் மேனன் அணுகியிருந்தார். தபுவுக்கு பதிலாக சௌந்தர்யா, மம்மூட்டிக்கு பதிலாக பார்த்திபன் நடிக்க வேண்டியது. ஆனால் ஜீன்ஸ் படத்தின் வரவேற்பால் மீண்டும் இந்த படத்தில் பிரசாந்த் தனக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்தால் நன்றாக இருக்கும் என எண்ணினார். ஆனால் கதைப்படி அது ஒத்துப்போகாததால் அஜித் ஹீரோவாக மாற்றப்பட்டார். 

இந்த படத்தில் அஜித்தின் அக்கா கேரக்டரில் நடிகை அனிதா ரத்னம் நடித்த நிலையில் அவர் ஒரு காட்சியில் அஜித்தை திட்டும்படி இருந்தது. இதனைப் பார்த்த தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் காட்சியை மாற்ற வேண்டும் என தெரிவித்து கதையில் சிறிது மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.