நடிகர் திலீப் உடனான விவாகரத்துக்குப் பிறகு மலையாள சினிமாவின் ’36 வயதினிலே’ படம் மூலம் கம் பேக்கும், தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்தும் இளம் நடிகைகளுக்கு இணையாக மாஸ் காட்டி வருகிறார் மஞ்சு வாரியர்.


அசுரன், அஜித்தின் 61ஆவது படம் என தமிழிலும் வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ள மஞ்சு வாரியர், தற்போது ஆயிஷா எனும் இந்தோ- அரேபிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்திய மொழியான மலையாளம் மற்றும் அரேபிய மொழிகளில் தயாராகி வரும் முதல் இந்தோ அரேபியத் திரைப்படம்  எனும் பெருமையை இப்படம் பெற்றுள்ளது.


இவை தவிர தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 7 மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ‘கன்னிலு கன்னிலு’ எனும் பாடலுக்கு பிரபல நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா கொரியாகிராஃப் செய்துள்ள நிலையில், முன்னதாக இப்பாடலின்  லிரிக்கல் வீடியோ வெளியாகி பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


 






பிரபு தேவாவின் மெய்சிலிர்க்க வைக்கும் நடன அமைப்பால் இந்தப் பாடல், பார்வையாளர்களின் மனதை கவர்ந்திருக்கிறது.  இந்தப் படத்தில் 70 சதவீதம் பிற நாட்டைச் சேர்ந்த கலைஞர்கள் நடித்திருக்கிறார்கள். அரபு நாடுகளில் இந்த திரைப்படம் அரபு மொழியிலேயே வெளியாகவிருக்கிறது. சவுதி அரேபியாவில் ஒரு இந்தியத் திரைப்படம், இத்தகைய கவனத்தைப் பெறுவது இதுவே முதன்முறை.


அத்துடன் இசையமைப்பாளர் ஜெயச்சந்திரன் இசையில், பாடலாசிரியர்கள் பிகே ஹரி நாராயணன், சுஹைல் கோயா ஆகியோர் எழுதிய பாடலை இந்திய மற்றும் அரபு நாட்டினைச் சேர்ந்த பின்னணி பாடகர்கள் இணைந்து பாடியுள்ளனர்.


படத்தில் மஞ்சு வாரியருடன் நடிகைகள் ராதிகா, சஜ்னா, பூர்ணிமா, துனிசியா நாட்டை சேர்ந்த லத்திபா, ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சலாமா, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஜெனிபர், நைஜீரிய நாட்டைச் சேர்ந்த சரஃபினா, ஏமன் நாட்டை சேர்ந்த சுமையா, சிரியா நாட்டை சேர்ந்த இஸ்லாம் என பல கலைஞர்களும் நடித்துள்ளனர்.


 






ஆஷிப் கக்கோடி படத்துக்கு கதை எழுத, அறிமுக இயக்குநர் அமீர் பள்ளிக்கல் இயக்கியிருக்கிறார். விஷ்ணு ஷர்மா ஒளிப்பதிவு, அப்பு என். பட்டாத்திரி படத்தொகுப்பு, கலை இயக்கம் மோகன்தாஸ்.


இந்நிலையில், இந்தோ -அரேபிய கூட்டுத்தயாரிப்பாக உருவாகியிருக்கும் ‘ஆயிஷா’, சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் அரேபிய மொழியில் வெளியாகிறது. இந்நிலையில்,  இந்தியக் கலைஞர்களும் இப்படத்தின் மூலம் சர்வதேச அளவிலான கவனத்தைப் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.