நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் நேற்று நெருங்கிய உறவுகளின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளிவந்த தேவராட்டம் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் காதலித்து வந்தனர் என்று கூறப்பட்ட நிலையில், ஒரு மாதத்திற்கு முன்னரோ இந்த ஜோடி தங்களது காதலை சமூக வலைதளத்தில் அறிவித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் இருவரும் கரம்பிடித்தனர்.
சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை மஞ்சிமா, கௌதம் கார்த்திக் உடன் தனக்கு ஏற்பட்ட காதல் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், "ஒரு முறை சென்னையில் நான் என் வீட்டு கதவை மூட செல்லும் போது எனது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் சின்ன காயம் என அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். ஒரு மாதத்திற்கு பின், அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் நான் என் சிகிச்சையை மேலும் தாமதப்படுத்தினால் எனது காலை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்படும் என அறிவுறுத்தினர். பிறகு நான் அறுவை சிகிச்சை செய்து பல மாதங்கள் படுக்கையிலேயே ஓய்வில் இருந்தேன்.
என் வாழ்வின் மிகக் கடினமான நேரம் அது! நான் மனதுடைந்து போய் விட்டேன். என்னை சமாதானப்படுத்த முடியாமல் எனது பெற்றோர்கள் தவித்து போயிருந்தனர். அந்த சமயத்தில் கௌதம் தான் என்னுடன் இருந்தார். தேவராட்டம் திரைப்பட படப்பிடிப்பில் இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இந்த சம்பவத்திற்கு பின் அவர் எனக்கு மிகவும் ஸ்பெஷல்லாக மாறிவிட்டார். என்னுடைய பெற்றோர்களும் அவரை மிகவும் விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.
மேலும் திருமணத்திற்கு பின், விரைவில் வேலைக்கு திரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.