பக்கத்து வீட்டுக்காரரை அடித்து கொலை செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, தாய், மகன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டத்திற்குட்பட்ட எழிலூர் மேலத் தெருவை சேர்ந்தவர் அருள்தாஸ் வயது 38. இவர் பள்ளிபாளையம் திருச்செங்கோட்டில் உணவகம் ஒன்றில் மாஸ்டராக பணி புரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் விடுமுறைக்காக கடந்த 18.03.2020 அன்று சொந்த ஊருக்கு வந்திருந்த அருள்தாஸிடம் அவரது மனைவி பாலசுந்தரி குழந்தைகளினால் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சண்டை ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து அருள்தாஸ் தனது குழந்தைகளை அழைத்து கடுமையாக திட்டி பக்கத்து வீட்டிற்கு செல்லக்கூடாது என்று எச்சரித்து பக்கத்து வீட்டுக்காரரின் மனைவி குறித்து தகாத வார்த்தையில் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரரான செல்லத்துரை மனைவி சந்திரா அருள்தாஸ் மனைவியின் தலைமுடியை பிடித்து அடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அருள்தாஸ் தனது மனைவியை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார். அப்போது செல்லத்துரை அருகில் இருந்த மூங்கில் கட்டையால் அருள்தாஸின் தலையில் தாக்கியுள்ளார். செல்லத்துரை மகன் சுதாகர் பனை சுருக்கு மட்டையால் அருள்தாஸின் தலையில் தாக்கியுள்ளார். இதில் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே அருள் தாஸ் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக செல்லதுரை, சுதாகர், சந்திரா ஆகிய மூன்று பேரையும் உடனடியாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி குறிப்பாக செல்லதுரை குடும்பத்தினருக்கும் அருள்தாஸ் குடும்பத்தினருக்கும் அடிக்கடி குழந்தைகளால் பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் அருள்தாஸ் வெளியூரில் வேலை பார்த்து மாதத்திற்கு ஒருமுறை வீட்டிற்கு வரும் பொழுது சந்திரா தொடர்ந்து பிரச்னை செய்து வருகிறார், குழந்தைகளை காரணம் காட்டி தன்னிடம் பிரச்சனை செய்கிறார் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள் தாஸ் குழந்தைகளை கண்டித்ததுடன் சந்திரா தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்து சந்திரா அவரது கணவர் மற்றும் மகன் மூன்று பேரும் சேர்ந்து அவரை கட்டை மற்றும் கம்பால் தலையில் தாக்கி கொலை செய்ததாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்தனர். அதனை எடுத்து மூன்று பேரையும் கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கிய திருவாரூர் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சாந்தி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த செல்லதுரை அவரது மனைவி சந்திரா மற்றும் மகன் சுதாகர் ஆகியோருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை, ஐந்து வருட கடுங்காவல் தண்டனை மற்றும் 6000 ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பளித்துள்ளார். மேலும் சந்திரா பாலசுந்தரியின் தலைமுடியை பிடித்து அடித்து வன்கொடுமையில் ஈடுபட்டதால் அவருக்கு கூடுதலாக மூன்று மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். குழந்தைகள் பிரச்னைக்காக ஒருவரை அடித்துக் கொள்வது மனிதாபிமானமற்ற செயல் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில், கொலை செய்த மூன்று நபர்களுக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சமூக ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.