பாலிவுட் நடிகைகள் பலர் தமிழ் சினிமாவில் பிரபலம் அடைந்துள்ளனர். அப்படி 90களில் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. இயக்குனர் மணிரத்தனத்தின் பாம்பே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்படம் ஒரு வெற்றி படமாக அமைந்ததால் ஏராளமான வாய்ப்புகளும் குவிந்தன. அடுத்ததாக நடிகர் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன், ஆளவந்தான்,  அர்ஜுன் ஜோடியாக முதல்வன் என முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்களாக அமைந்தன. இறுதியாக மனிஷா கொய்ராலா தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக பாபா திரைப்படத்தில் நடித்திருந்தார். அப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் மனிஷா கொய்ராலாவிற்கு தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போனது.  



பாபா படத்தால் வாய்ப்புகளை இழந்தேன் :


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் மனிஷா பகிர்ந்த ஒரு தகவல் தமிழ் ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் பேசுகையில் " தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்க எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன ஆனால் ரஜினிகாந்துடன் நடித்த பாபா படமே எனது கடைசி படமாக ஆனது. பாபா படம் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் அப்படம் படு தோல்வி படமானது. அது எனது கேரியரை பாதிக்கும் என நினைத்தேன். நினைத்தது போலவே தென்னிந்திய சினிமாவில் என்னுடைய மார்க்கெட்டையும் இழந்தேன். முன்னர் வாய்ப்பளித்த எவரும் பாபா படத்தின் தோல்வியை பார்த்த பிறகு வாய்ப்பளிக்க முன்வரவில்லை. ஆனால் 20 ஆண்டுகளுக்கு பிறகு பாபா படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றம் செய்யப்பட்டு ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த காலகட்டத்தில் பாபா திரைப்படம் வெற்றி பெற்றுள்ளது. நான் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட பாபா  படத்தை பார்த்தேன். எனக்கு அது மகிழ்ச்சியை கொடுத்தது" என்றுள்ளார்.   


கோபத்தில் ரசிகர்கள் :


மனிஷா கொய்ராலா கூறியுள்ள இந்த தகவல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால் உண்மையில் மனிஷாவிற்கு பாபா படத்திற்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என கூறியது முற்றிலும் தவறான ஒரு செய்தி. பாபா திரைப்படம் வெளியான ஆண்டு 2002. அதற்கு பிறகு 2005ம் ஆண்டு வெளியான மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் கமலுடன் நடித்திருந்தார். 2011ம் ஆண்டு வெளியான மாப்பிள்ளை திரைப்படத்தில் நடிகர் தனுஷ் மாமியாராக சிறப்பாக நடித்திருந்தார் மனிஷா கொய்ராலா. இப்படத்திற்காக சிறந்த துணை நடிகை பிரிவில் பிலிம்பேர் விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாபா படம் தோல்வி அடைந்ததால் தான் ஒட்டுமொத்தமாக தென்னிந்திய சினிமாவில் அவரின் மார்க்கெட் பறிபோனது என கூறுவது தவறு என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.