தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இருவரும் 'நாயகன்' படத்திற்கு பிறகு 33 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'தக் லைஃப்'. ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்தினத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் திரிஷா, ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜோஜூ ஜார்ஜ், சிம்பு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
தக் லைஃப்:
ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 'தக் லைஃப்' படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்று வந்தது. டப்பிங் பணிகளும் சில தினங்களுக்கு முன்னர் துவங்கியதாக தகவல்கள் வெளியாகின.
நாசர், அபிராமி:
ஏற்கனவே 'தக் லைஃப்' படத்தில் நடிகர் நாசர் மற்றும் நடிகை அபிராமி இணைய உள்ளதாக சில தகவல்கள் கசிந்தன. அதை தற்போது உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரபூர்வமான போஸ்டரை படக்குழு வெளியிட்டு அவர்கள் இருவரும் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நடிகர் நாசர் - கமல்ஹாசன் கூட்டணியில் ஏராளமான படங்கள் வெளியாகியுள்ளன. இரண்டு நடிப்பு ராட்சர்களுக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி என்றுமே ரசிகர்களின் ஃபேவரட். மீண்டும் அவர்கள் இருவரும் 'தக் லைஃப்' படத்தில் இணைவது திரை ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.
மேலும் நடிகர் கமல்ஹாசன் ஜோடியாக நடிகை அபிராமி ஏற்கனவே 2004ம் ஆண்டு வெளியான 'விருமாண்டி' படத்தில் நடித்துள்ளார். அவர்கள் இவரின் காம்போ பாடலான 'உன்னை விட இந்த உலகத்தில்...' பாடல் இன்றளவும் எவர்கிரீன் பாடல் வரிசையில் இடம்பெற்றுள்ளன. அந்த சூப்பர் காம்போவை மீண்டும் 'தக் லைஃப்' படத்தில் காண ஆர்வமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். நடிகர் கமல்ஹாசன் - அபிராமி தம்பதியின் மகனாக சிம்பு நடித்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொங்கல் வெளியீடு:
நடிகர் கமல்ஹாசன் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதாக கூறப்படும் இப்படத்தின் கதைக்களம் என்ன என்பது சர்ப்ரைஸாகவே உள்ளது. அது குறித்த எந்த ஒரு தகவலையும் இதுவரையில் வெளியிடவே இல்லை. படத்தின் படப்பிடிப்பும் மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் அதே வேளையில் ஒரு பக்கம் டப்பிங் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை போஸ்ட் புரொடக்ஷன் பணிகளுக்கு காலதாமதமானால் படத்தை வரும் 2025 பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிகின்றன. இருப்பினும் அதிகாரபூர்வமான தகவல் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை.