இந்திய சினிமாவில் முக்கியமான இயக்குநராக பேசப்படும் மணிரத்னம் தற்போது உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். ஹாலிவுட்டின் மிகப்பெரிய விருது வழங்கும் விழாவான ஆஸ்கர் குழுவின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் மணிரத்னம் . ஆஸ்கர் குழுவில் தேர்வு செய்யப்பட்ட முதல் தமிழ் இயக்குநர் மணிரத்னம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 28 ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் குழுவில் இணைவதற்காக உலகம் முழுவதும் உள்ள மொத்தம் 399 கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் பாலிவுட் இயக்குநர் கரன் ஜோஹார் , தெலுங்கு நடிகர் ராம் சரண் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருந்து இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனை பாராட்டும் வகையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் மணிரத்னமுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். “ வாழ்த்துக்கள் மணிரத்னம். பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்கள், தில் சே, ரோஜா , பாம்பே இன்னும் நிறைய. வெல்கம் டூ தி க்ளப்” என்று மணிரத்னத்தைப் பாராட்டி உள்ளார் ரஹ்மான்.
மணிரத்னம்
இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக அறியப்படும் மணிரத்னம் கன்னடத்தில் பல்லவி , அனுபல்லவி என்கிற படத்தில் தனது இயக்குநர் பயணத்தைத் தொடங்கினார். தமிழில் தனது முதல் படமான பகல் நிலவு படத்தை இயக்கினார் மணிரத்னம் . இந்தப் படம் தோல்வியடையவே அடுத்ததாக இதயக் கோவில் படத்தை இயக்கினார்.
1986 ஆம் ஆண்டு வெளியான மெளன ராகம் திரைப்படம் மணிரத்னம் என்கிறப் பெயருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது. தொடர்ந்து கமல்ஹாசனுடன் நாயகன் அடுத்ததாக அக்னி நட்சத்திரம், அஞ்சலி , தளபதி, ரோஜா, பம்பாய் என வெற்றிப் படங்களை இயக்கினார் மணிரத்னம் . வெற்றிப் படங்களாக மட்டுமில்லாமல் தனக்கென ஒரு தனித்துவமான கதை சொல்லும் முறையை உருவாக்கினார். தமிழில் மட்டுமில்லாம இந்தியிலும் தனது படங்களுக்கான ரசிகர்களை உருவாக்கினார்.
தொடர்ந்து இருவர், அலைபாயுதே, குரு, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, ராவணன் , கடல், ஓ காதல் கண்மணி, காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், பொன்னியின் செல்வன், ஆகியப் படங்களை இயக்கிய மணிரத்னம் எல்லா காலத்துக்குமான இயக்குநராக பாராட்டப்படுகிறார். தற்போது ஆஸகர் குழுவில் இணைந்திருக்கும் மணிரத்னம் இளம் தலைமுறைகளின் படைப்புகளை நிச்சயம் உலகளவில் கொண்டு சேர்க்க முயற்சிப்பார் என்று எதிர்ப்பார்க்கலாம்.