நடிகர் கமல்ஹாசன் நடிக்கவுள்ள தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மணிரத்னம் இயக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஜெயம் ரவி, த்ரிஷா என பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை கமலின் ராஜ் கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.
1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்துக்குப் பின் கிட்டதட்ட 36 ஆண்டுகள் கழித்து கமல்ஹாசன் - மணிரத்னம் ஆகியோர் இணைந்துள்ளது திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் கடல் படத்துக்குப் பின் கௌதம் கார்த்திக், ஓகே கண்மணி படத்துக்குப் பின் துல்கர் சல்மான், பொன்னியின் செல்வன் படத்துக்குப் பின் ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் மீண்டும் ஒரே படத்தில் இணைவது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என பல கேள்விகளை ரசிகர்களிடத்தில் எழுப்பியுள்ளது. கமலின் 234வது படமாக தக் லைஃப் உருவாகிறது.
வரிசைக்கட்டும் கமல் படங்கள்
நடிகர் கமல்ஹாசன் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இதில் பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத், சித்தார்த், எஸ் ஜே சூரியா, மறைந்த நடிகர்கள் மனோபாலா, விவேக் , மற்றும் ஜி மாரிமுத்து என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இதேபோல் பிரபாஸ் நடித்து வரும் பான் இந்தியத் திரைப்படமான கல்கி 2898 படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் கமல்ஹாசன். 600 கோடி ரூபாய் செலவில் சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். மேலும் எச்.வினோத் இயக்கத்திலும் கமல்ஹாசன் படமொன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.