கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் மற்றும் பலர் என மிக பெரிய திரை பட்டாளம் நடித்திருந்த இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார்  இசை புயல் ஏ.ஆர். ரஹ்மான்.   



சோழா டூர்: 


பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியானது. அதன் மகத்தான வெற்றியை அடுத்து வரும் ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. ரிலீசுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் மிகவும் மும்மரமாக படத்தின் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் படக்குழுவினர். PS 2  புரொமோஷனுக்காக சோழர்கள் ஒவ்வொரு மாநிலமாக சென்று விளம்பரம் செய்து வருகிறார்கள். அந்த வகையில்  ஹைதராபாத்தில் நடைபெற்ற புரொமோஷன் நிகழ்வில் இயக்குநர் மணிரத்னம் கலந்து கொண்டுள்ளார். 



மணிரத்னம் புகழ்ச்சி:


ஹைதரபாத்தில் இயக்குநர் மணிரத்னம் பேசுகையில் எஸ்.எஸ். ராஜமௌலியை புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசுகையில் "எஸ்.எஸ். ராஜமௌலி பாகுபலி படத்தை இரண்டு பாகங்களாக எடுக்கவில்லை என்றால் பொன்னியின் செல்வன் படமும் இரண்டு பாகங்களாக உருவாகி இருக்காது. அதற்காக நான் அவருக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். பாகுபலி படம்தான் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க வழிவகுத்தது. எனக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த திரையுலகத்தினரையும் சரித்திர படங்களை எடுக்க ஊக்குவித்துள்ளது. மேலும் சரித்திர கதைகளை படங்களாக கொண்டு வர திரைப்பட கலைஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளது" என புகழ்ந்து பேசியிருந்தார் இயக்குநர் மணிரத்னம். 







பெரிய பட்ஜெட் படங்கள்: 


மேலும் பாகுபலி போன்ற ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை எடுத்து அதை மாபெரும் ஹிட் படமாக கொடுத்ததுதான் பல தயாரிப்பாளர்களும் பெரிய பட்ஜெட் படங்கள் எடுக்க ஊக்குவித்துள்ளது. இது இந்திய சினிமாவின் வளர்ச்சியை காட்டுகிறது. அதற்கு முக்கியமான காரணம் எஸ்.எஸ். ராஜமௌலி என பேசியிருந்தார் மணிரத்னம். 


மணிரத்னம் பேசிய இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோவை பகிர்ந்து மணிரத்னத்துக்கு பாராட்டுகளை தெரிவித்துள்ளது பாகுபலி படக்குழு என்பது குறிப்பிடத்தக்கது.