KH234
1987ஆம் ஆண்டு வெளியான நாயகன் படத்தைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி இணந்துள்ளார்கள். கமல்ஹாசனின் 234ஆவது படமாக உருவாக இருக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க இருக்கிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்க இருக்கிறது.
இன்று நவம்பர் 6ஆம் தேதி காலை இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. மேலும் இந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பை இன்று மாலை 5 மணியளவில் படக்குழு வெளியிட இருக்கிறது.
நடிகர்கள்
இந்நிலையில் இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் பெயர்களை வெளியிட்டு வருகிறது படக்குழு. முதலில் இந்தப் படத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் தகவல் வெளியிடப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் கதாநாயகனாக நடித்த துல்கர் சல்மான், இந்தப் படத்தில் மணிரத்னம் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்க இருக்கிறார்.
இதனை அடுத்து இந்தப்படத்தில் த்ரிஷா நடிக்கும் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் ஆயுத எழுத்து மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள த்ரிஷா இந்தப்படத்தின் மூலம் மூன்றாவது முறையாக மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களின் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
போஸ்டரின் இடம்பெற்ற பாரதியார் பாடல்
KH234 படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த போஸ்டரில் இலைமறை காயாக தெரியும் வரிகள் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் கவிதை வரிகள் என்று தெரியவந்துள்ளது.
காலா நான் உனை சிறு புல்லென மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா ! சற்றேஉனை மிதிக்கிறேன் - அட
வேலாயுத விருதினை மனதிற் பதிக்கிறேன் - நல்ல
வேதாந்த முரைத்த ஞானியர் தமையெண்ணித் துதிக்கிறேன் -- ஆதி
மூலாவென்று கதறிய யானையைக் காக்கவே - நின்றன்
முதலைக்கு நேர்ந்ததை மறந்தாயோ? கெட்ட மூடனே-- அட (காலா)
ஆலால முண்டவ னடிசர ணென்ற மார்கண்டன் - தன
தாவி கவரப்போய் நீபட்ட பாட்டினை யறிகுவேன்- இங்கு
நாலாயிரம் காதம் விட்டகல் உன்னை விதிக்கிறேன் -ஹரி
நாராயண னாகஆக நின் முன்னே உதிக்கிறேன் - அட (காலா)
என்கிற பாரதியாரின் ‘காலனுக்கு உரைத்தல்’ என்கிற கவிதை வரிகள் இந்தப் போஸ்டரில் மிரர் ரைட்டிங் அதாவது வலமிருந்து இடதுபுறம் எழுதப்பட்டு இடம்பெற்றுள்ளன. இந்த வரிகளுக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் என்ன தொடர்பு இருக்கலாம் என்பதை ரசிகர்கள் யூகித்து வருகிறார்கள்.