எம். மணிகண்டன் இயக்கிய காக்கா முட்டைத் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 8 ஆண்டுகள் நிறைவடைகின்றன.


பொது இடத்தில் உதாரணமாக ஒரு திரையரங்கத்தின் சீட்டுக்கடியில் , அல்லது பேருந்து நிலையத்தில் , வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மேசைக்கு கீழ் மென்று ஒட்டவைக்கப்பட்ட பபிள் கம் எதெச்சையாக உங்கள் கையில் அகப்பட்டது உண்டா. ஒரு விதமான அறுவருப்பு , இனம் புரியாத கோபம் அப்போது உங்களுக்கு வந்திருக்கிறதா? காக்கா முட்டை திரைப்படத்தைப் பார்த்தப்பின் ஏறத்தாழ இந்த மாதிரியான ஒரு உணர்வுடன் ஒப்பிடலாம்.


தனிப்பட்ட ஒரு நபரின் மீதான வெறுப்போ கோபமோ இல்லை. வளர்ச்சி முன்னேற்றம் நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் ஒரு நகரத்தின் மேல் வரும் கோபம்.


சென்னையின் ஒரு குப்பத்தில் வாழும் இரண்டு சகோதரர்கள். சின்ன காக்கா முட்டை மற்றும் பெரிய காக்கா முட்டை. தொலைகாட்சியில் வரும் பீட்சா விளம்பரத்தைப் பார்த்து தாங்களுகு பீட்சா சாப்பிட விரும்புகிறார்கள். ஆனால் அதற்கு அவர்களுக்கு கொஞ்சம் பணம் தேவை. அதிகபட்சம் 300 ரூபாய் இருக்கலாம். இதற்கிடையில் அவர்களைச் சுற்றி  சில நேரங்களில் அவர்களையே வைத்து நடக்கும் அரசியல்கள். இறுதியாக காக்கா முட்டைகள் பீட்சா சாப்பிடுகிறார்களா இல்லையா என்பதே கதை.


மேலோட்டமாகப் பார்க்க  பீட்சா சாப்பிட நினைக்கும் இரண்டு சிறுவர்களின் கதை காக்க முட்டை . இல்லையென்றால்  உலகமயமாக்கலின் மேல் மனிகண்டன் வைத்த விமர்சனமாகவும் இந்தப் படத்தைப் புரிந்துகொள்ளலாம். சென்னையின் பூர்வகுடிகளின் இடத்தில் அவர்களுக்கு தொடர்பே இல்லாத ஒரு உணவை விளம்பரம் செய்து அதை அடைவதற்கு அவர்களின் ஆசையைத் தூண்டிவிடும் நுகர்வுக் கலாச்சாரத்தின் மீதான விமர்சனமாகவும், இந்த மக்களின் வாழ்க்கையை வைத்து தங்களது ஆதாயத்திற்காக அரசியல்வாதிகள் நிகழ்த்தும் விளையாட்டின்மேல் வைக்கும் விமர்சனமாகக் கூட இதைப் புரிந்துகொள்ளலாம்.


தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்கான என்பது மிகக் குறைவு. அந்த வகையில் குழந்தைகளை வைத்து சொல்லப்பட்ட ஒரு நல்ல கதை காக்கா முட்டை. குழந்தைகளின் மொழியில் பேசும்போது பல காத்திரமான அரசியலை அவர்களைக் கொண்டு மிக இயல்பான வார்த்தைகளில் சொல்லிவிட முடிகிறது.


படத்திற்கு வசனங்கள் எழுதிய ஆனந்த் குமரேசன் வழக்கமான அரசியல் கோஷங்களாக இல்லாமல்  வசனங்களில் முற்றிலும் புதிய ஒரு அரசியல் தொனியை கையாண்டிருந்தார். காக்கா முட்டைத் திரைப்படம் சிறந்தப் படத்திற்கான தேசிய விருதை வென்றது. நடிகர் தனுஷ் இந்தப் படத்தை தயாரித்தார். இயக்குநர் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான க்ராஸ் ரூட் இந்தப் படத்தை வெளியிட்டது. இன்றுடன் 8 ஆண்டுகளை நிறைவுசெய்யும் காக்கா முட்டை தமிழ் சினிமாவின் நல்ல வரவு.