பார்த்திபன் கனவு, பிரிவோம் சந்திப்போம் போன்ற ஃபீல் குட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்த இயக்குநர் கரு. பழனியப்பன் ஒரு இயக்குநராக மட்டுமின்றி ஒரு ஹீரோவாகவும் அவதாரம் எடுத்த ஒரு திரைப்படம் 'மந்திர புன்னகை'. இப்படம் வெளியாகி இன்றோடு 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. வழக்கமான தமிழ் சினிமாபோல் அல்லாமல் சற்றே மாறுதலான ஒரு கதையம்சம் கொண்ட ஒரு திரைப்படம் என்பதால் ரசிகர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்தது. 



 


தயக்கம் இன்றி படமாக்கிய இயக்குநர் :


எதை எல்லாம் ஒரு சினிமாவில் பேச தயங்குவார்களோ அதை எல்லாம் வெளிப்படையாக பேசி கைதட்டலை பெற்ற ஒரு படம் 'மந்திர புன்னகை'. குடி, கும்மாளம், கைநிறைய காசு என ஒரு உல்லாசமான வாழ்க்கையை வாழும் ஒரு சிவில் என்ஜினீயராக, கருகருவென இருக்கும் அடர்த்தியான தாடி, சோடாபுட்டி கண்ணாடி, வாய் நிறைய வசனம் என கதைக்கு கனகச்சிதமாக பொருந்தி இருந்தார் கரு. பழனியப்பன். வழக்கமான ஹீரோ போல இல்லாமல் ஒரு டைப்பான ஹீரோவாக கரு. பழனியப்பன் சிறப்பாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் சபாஷ் வாங்கினார்.   


அவருக்கு ஜோடியாக அவுட் ஸ்போக்கன் பெண்ணாக இயல்பாக நடித்திருந்தார் மீனாட்சி. இருவருக்கும் ஒருவர் மீது ஒருவர் முதல் பார்வையிலேயே ஈர்ப்பு ஏற்பட்டு நட்பாகி, நட்பு பின்னர் காதலாக மலர்ந்து வழக்கம் போல சந்தேகத்தில் முடிகிறது. சந்தேகத்தின் உச்சத்தில் ஹீரோ ஹீரோயினை கொலை செய்யும் அளவிற்கு போவது தான் உச்சக்கட்டம். இதில் காதல் வென்றதா அல்லது கொலை நடந்ததா  என்பதுதான் படத்தின் திரைக்கதை. இதை மிகவும் சாமர்த்தியமாக சுவாரசியம் கலந்து நகர்த்திய இயக்குநர் பாராட்டப்பட்டார். 






வெளிப்படையான திரைக்கதை :


படத்திற்கு கூடுதல் கலகலப்பு சேர்த்தனர் நடிகர் சந்தனம் மற்றும் தம்பி ராமையா. இவர்கள் வரும் காட்சிகள் எல்லாம் சிரிப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. எப்படி ஒரு மனிதன் ஒரு சந்தேக புத்தி கொண்டவனாகவும், மன நோயாளியாகவும் உருமாறுகிறார் என்பதை மிகவும் அழகாக திரைக்கதை மூலம் அலசி ஆராய்ந்து மிகுந்த துணிச்சலுடன் திரைப்படமாக காட்சிப்படுத்திய திரைப்படம் தான் 'மந்திர புன்னகை'. இப்படம் வெளியாகி 12 ஆண்டுகளை கடந்து இருந்தாலும் இப்படி ஒரு வெளிப்படையான துணிச்சலான திரைப்படத்தை எடுக்க கரு. பழனியப்பன் எடுத்த முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்தது.