பியார் மெயின் கபி கபி, ஷாதி கா லட்டு, அந்தோனி கவுன் ஹே போன்ற படங்களை இயக்கியவர் தான் மந்திரா பேடியின் கணவர்  ராஜ் கௌஷால். 49 வயதான இவர் கடந்த வாரம் மாரடைப்பால் காலமானார். காதல் கணவரின் திடீர் இறப்பால் கலங்கிப்போன மந்திரா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் தான் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உடைந்த இதயத்தின் எமோஜியை தலைப்பாக பதிவிட்டுள்ளார். அவருடைய வருத்தங்களுக்கு பலரும்  ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


1996ல் ஒரு திரைப்படத்துக்கான ஆடிஷனில்தான் முதன்முதலில் மந்திராவைச் சந்தித்தார் கௌஷால். இருவரும் எதிரெதிர் துருவங்கள். பார்த்ததுமே ஈர்ப்பு. மூன்றாவது டேட்டிங்கிலேயே இவள்தான் மனைவி என முடிவெடுத்திருந்தார் கௌஷல். மந்திராவைப் பொருத்தவரை ராஜ் மிகவும் சிம்பிளான நேர்மையான மனிதர். ராஜ்க்கு மந்திரா இண்டெலிஜெண்ட் அழகி.  




 1999ல் காதலர் தினத்தன்று காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். 2011ல் பிறந்த மகன் வீர், தத்துக் குழந்தை தாரா என இருவரின் காதலும் கொள்ளமுடியாத அளவுக்குப் பெருகியிருந்தது. தனது குடும்பத்தைக் கொண்டாடித் தீர்த்தவர் ராஜ் என்பதற்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கமே சாட்சி.


முன்னதாக இயக்குநர் ஒனிர் தனது அதிகார ட்விட்டர் பக்கத்தில் ராஜ் கவுஷல் மரணத்தை அதிகாரப்பூர்வாமாக வெளியிட்டார் அதில் " “மிக விரைவில் எங்களை விட்டு போய்விட்டார். இன்று காலை திரைப்படத் தயாரிப்பாளரையும் இயக்குநரையும் நாங்கள் இழந்தோம். மிகவும் வருத்தமாக உள்ளது. எனது முதல் படமான #MyBrotherNikhil தயாரிப்பாளர்களில் இவரும் ஒருவர். எங்கள் இலக்கை நம்பி எங்களுக்கு ஆதரவளித்தவர்களில் இவரும் ஒருவர். அவரது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார் . ஞாயிற்றுக்கிழமை அன்று மந்திரா மற்றும் ராஜ்  ஆகியோர் தங்கள் நெருங்கிய நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தனர். அதில்  நேஹா துபியா, அங்கத் பேடி, சாகரிகா காட்ஜ், கிரிக்கெட் வீரர் ஜாகீர் கான், ஆஷிஷ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது .


தனது கணவரின் இறுதிச்சடங்கை செய்த மந்திராவுக்கு சிலர் கண்டனங்களை தெரிவித்தனர்.ராஜ்க்கான இறுதி சடங்குகளை வெள்ளை உடை ஜீன்ஸ் அணிந்தபடி மந்திரா செய்ததுதான்  சர்ச்சையானது. ஒரு பெண் எப்படி இறுதிச் சடங்குகளைச் செய்யலாம் என்றும், ஜீன்ஸ் பேண்ட் அணிந்து எவ்வாறு இறுதிச் சடங்கு செய்யலாம் என்றும் பலர் கேள்வியெழுப்பினர். ஆனால் அன்புக்குறியவர்களை கடைசியாக வழியனுப்புவதில் பாலினம் என்ன இருக்கிறது என பல்வேறு தரப்பினரும் பதிலளித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.