பாலிவுட்டில் ஃபேஷன், வோ லம்ஹே, கேங்ஸ்டர் உள்ளிட்ட பல படங்கள் தொடங்கி இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக விளங்குபவர் கங்கனா ரனாவத். அண்மையில் ஏ.எல்.விஜய் இயக்கி வெளியான தலைவி படத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பேர் போன நடிகை கங்கனா ரனாவத். சுசாந்த் சிங் ராஜ்புத் இறப்பையொட்டி பாலிவுட்டின் வாரிசு அரசியல் மீது வைத்த விமர்சனம் தொடங்கி, சமீப காலமாக அவர் முன்வைக்கும் கருத்துக்கள் அனைத்தும் சர்ச்சைக்கு வித்திட்டு வருகின்றன. அவர் தற்போது லாக் அப் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இதனை பாலாஜி டெலிபிலிம் நிறுவனர் ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார். ஓடிடி தளத்தில் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வரும் லாக் அப் ரியாலிட்டி ஷோவிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.



அவருடைய நிகழ்ச்சியில் சமீபத்தில் நடிகை மந்தனா கரிமி கலந்துகொண்டு பல சர்ச்சைக்குரிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார். மந்தனா தனது கணவரைப் பிரிந்தது மற்றும் அந்த நேரத்தில் ஒரு திரைப்பட தயாரிப்பாளருடன் தனக்கு எப்படி ரகசிய உறவு ஏற்பட்டது என்பது குறித்து பேசினார். “நான் அவரை பிரிந்து, அந்த சூழ்நிலையை கையாள போராடிக் கொண்டிருந்த நேரம் அது, அப்போது எனக்கு யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய உறவு ஏற்பட்டது. பெண்ணியம், பெண்கள் உரிமைகள் பற்றி பேசும் பிரபல இயக்குனருடன்தான் அந்த உறவு மலர்ந்தது. அவர் பலருக்கு முன்னோடியாக இருப்பவர். நாங்கள் ஒரு குழந்தையை பெறலாம் என்று திட்டமிட்டோம், ஆனால் அது நடந்தபோது, ​​அவர்…” என்று மந்தனா ப்ரோமோவில் கூற, அதோடு கட் செய்தனர்.






சுற்றியுள்ளவர்கள் கண்ணீரைத் துடைப்பது, அழுவது போன்ற காட்சிகள் காண்பித்தவாறு ப்ரோமோ முடிந்தது. மந்தனாவும் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். கங்கனா ரணாவத் கண்களை துடைத்தபடிக்கு சோகமாக காணப்பட்டார். மந்தனா கரிமி தொழிலதிபர் கவுரவ் குப்தாவை 2017 இல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான ஐந்து மாதங்களுக்குப் பிறகு அவரிடமிருந்து பிரிந்தார். அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது துன்புறுத்தியதாக (domestic violence) வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.