2008ம் ஆண்டு பி. வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் குசேலன். மேலும் இப்படத்தில் பசுபதி, நயன்தாரா, மீனா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். மலையாள திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமான குசேலன் படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார் நடிகை மம்தா மோகன்தாஸ். ஆனால் படம் வெளியான போது அதில் அவர் நடித்த காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்ற அதிர்ச்சியான தகவலை வெளியிட்டதுடன் அதற்கு யார் காரணம் என்பது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏமாற்றமடைந்த மம்தா :
நடிகர் விஷால் ஜோடியாக சிவப்பதிகாரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். அதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்த அவர் திடீரென மலையாள திரைப்படங்களில் ஆர்வம் காட்ட துவங்கிவிட்டார். அந்த சமயத்தில் தான் ரஜினி சாரின் அழைப்பின் பேரில் குசேலன் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் பேசுகையில் "குசேலன் திரைப்படத்திற்காக நான்கு, ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. குறிப்பாக அவருடன் ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டும் என ஏற்கனவே சொல்லியிருக்கிறார்கள். அன்று ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்திற்கு நான் சென்றும் ஷூட்டிங் நடைபெறவில்லை. ஷூட்டிங் டிலே என சொல்லி அரை நாள் ஓடிவிட்டது. எனக்கு அங்கு ஏதோ தவறாக நடக்கிறது என்பது புரிந்தது. யாரோ என்னை பற்றி தவறான கருத்தை கூறியிருக்கிறார்கள் என்பது தெரிந்தது. ஆனால் அதை மிகவும் பெரிய மனதுடன் ஏற்று கொண்டேன். யாரையும் பார்த்து நான் பயப்படவில்லை.
ரஜினி சாரின் போன் கால்:
ரஜினி சார் அழைத்தார் என்ற ஒரே காரணத்திற்காக தான் அந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் சென்றேன். சில வாரங்களுக்கு பிறகு ரஜினி சார் ஆபிஸில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அவர் என்னுடன் பேசினார். வந்ததற்கு நன்றி சொல்லவே என்னை போன் மூலம் தொடர்பு கொண்டார். அது மட்டுமே அவரின் கண்ட்ரோலில் இருந்தது. ஒட்டு மொத்த படக்குழுவும் என்னிடம் நன்றாக பழகினார்கள். ஆனால் அங்கு ஏதோ நடந்துள்ளது. ஏன், என்ன காரணம் என்பதை அவர்களால் என்னிடம் சொல்ல முடியவில்லை. யாரையோ காப்பாற்ற நினைத்து இருக்கலாம். அதை பற்றி நான் இப்போது பேச விரும்பவில்லை.
பொறுமையாகவே இருந்தேன் :
படம் வெளியான பிறகு நான் நடித்த எந்த கட்சிகளும் இடம்பெறவில்லை. பாடலுக்கான ஷூட்டிங் நடைபெறவே இல்லை. வேறு ஒரு நடிகை நடிப்பதாக இருந்தால் நான் இந்த ஷூட்டிங் வரமாட்டேன் என அப்படத்தின் லீட் ரோலில் நடிக்கும் நடிகை கூறியுள்ளார் என்பது எனக்கு சில நாட்களுக்கு பிறகு தான் எனக்கு தெரிய வந்தது. இது தான் எனக்கு சொல்லப்பட்டது. என் காதுகளில் வந்து சேர்ந்த விஷயம். அவர்கள் காமெராவை ஃபோகஸ் செய்யும் போதே எனக்கு புரிந்தது நான் பிரேமில் இல்லை என்பது. ஆக மொத்தத்தில் நான் அந்த பாடலில் நடிக்க இருந்த காட்சிகள் எடுக்கப்படவில்லை. மூன்று, நான்கு நாட்கள் எனக்கு வீணானது தான் மிச்சம். படம் வெளியான பிறகு என்னுடைய பேக் ஷாட் ஒன்று மட்டும் இருந்தது. இன்று இதே நிலைமை வேறு ஒரு நடிகைக்கு ஏற்பட்டால் அவர்கள் அதை அத்தனை ஈஸியாக எடுத்து கொள்ள மாட்டார்கள். நிச்சயமாக அதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள். இன்று சோசியல் மீடியா மூலம் வெளிப்படையாக இது குறித்து பேசுவார்கள். ஆனால் அன்று நான் அப்படி எதுவுமே செய்யாமல் அமைதியாக இருந்தேன்" என்றார் மம்தா மோகன்தாஸ்.