மலையாள திரையுலகின் மெகா ஸ்டார் என கொண்டாடப்படும் மம்மூட்டி தன்னுடைய நடிப்பாற்றலுக்கு இந்திய அளவில் பிரபலமானவர். கடந்த 50 ஆண்டுகால திரைவாழ்க்கையில் தொடர்ச்சியாக விமர்சன ரீதியாக வெற்றி பெற்று வருகிறார். அதேபோல நடிகர் பிருத்விராஜ் சுகுமாரனும் தன்னுடைய இயல்பான நடிப்பிற்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் பிளெஸ்ஸி இயக்கத்தில் வெளியான 'ஆடுஜீவிதம்' திரைப்படம் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார். விமர்சன ரீதியாக பாராட்டுகளை குவித்து வருகிறது ஆடுஜீவிதம் திரைப்படம். 


இந்த இரு பெரும் நடிகர்கள் இணைந்து 2010ம் ஆண்டு வெளியான 'போக்கிரி ராஜா' படத்தில் நடித்திருந்தனர். அதற்கு பிறகு ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் மீண்டும் திரையை பகிர போகிறார்கள் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. 



மீண்டும் மம்மூட்டி - ப்ருத்விராஜ் காம்போ :


2010-ஆம் ஆண்டு வெளியான போக்கிரி ராஜா படத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்க, நடிகர் பிருத்விராஜ் சிறப்பு தோற்றத்தில் அவரின் தம்பியாக நடித்திருந்தார். அவர்கள் இருவரும் 14 ஆண்டுகளுக்கு பிறகு அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் திரில்லர் படம் ஒன்றில் இணைய உள்ளார்கள் என்ற தகவல் சோஷியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 


இடைப்பட்ட காலத்தில் அவர்கள் இருவரையும் வைத்து பீரியட் ஆக்ஷன் படம் ஒன்றை எடுக்க அமல் நீரத் திட்டமிட்டு இருந்தார். ஆனால் அந்த திட்டம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 



மம்மூட்டியின் அடுத்த ப்ராஜெக்ட் :


தற்போது நடிகர் மம்மூட்டி, வைசாக் இயக்கத்தில் 'டர்போ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வரும் ஜூன் 13ம் தேதி வெளியாக உள்ளது.  மேலும் அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸுடன் 'பசூக்கா' என்ற படத்தில் இணைந்துள்ளார். பிளாக்பஸ்டர் ஹாரர் பீரியட் படமான பிரம்மயுகம் படத்திற்கு பிறகு மம்மூட்டியின் நடிப்பில் பேக் - பேக் இரு படங்கள் வெளியாக உள்ளத்தால் அவரின் ரசிகர்கள் ஆனந்த களிப்பில் உள்ளனர். விரைவில் எடிட்டராக இருந்து இயக்குநராக அடியெடுத்து வைக்கும் மகேஷ் நாராயணன் முதல் படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. 


பிஸியாக இருக்கும் பிருத்விராஜ் :


'ஆடுஜீவிதம்' படத்தின் மாபெரும் வெற்றியின் மூலம் தற்போது உச்சத்தில் இருக்கும் பிருத்விராஜ் சுகுமாரன், அடுத்ததாக விபின் தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள நகைச்சுவை என்டர்டெய்ன்ட்மென்ட் படமான 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற படத்தில் நடித்துள்ளார். பாசில் ஜோசப், அனஸ்வர ராஜன், நிகிலா விமல், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


இது தவிர தன்னுடைய இயக்கத்தில் மூன்றாவது படமான L2 எம்புரான் படம் குறித்த பணிகளில் பிஸியாக ஈடுபட்டுள்ளார் பிருத்விராஜ் என கூறப்படுகிறது.