தமிழ் சினிமாவின் சீயான் என்றழைக்கப்படும் நடிகர் விக்ரம் இன்று தனது 58வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விக்ரமாக மாறிய கென்னடி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 1966 ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி பிறந்த விக்ரமின் இயற்பெயர் கென்னடி ஜான் விக்டர். இவரது தந்தை தமிழ் சினிமாவின் பல படங்களில் தந்தை கேரக்டரில் அசத்திய வினோத் ராஜ். விக்ரம் மாமா முறை தான் நடிகர் தியாகராஜன். இப்படி தன்னை சுற்றி சினிமாவுலகைச் சேர்ந்தவர்கள் இருந்தாலும் விக்ரமுக்கு அந்த வாய்ப்பு எளிதாக அமைந்து விடவில்லை.
1990களின் காலக்கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு தேட தொடங்கிய காலக்கட்டத்தில் ஏகப்பட்ட விளம்பரங்களில் தோன்றினார். பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதர் இயக்கிய என் காதல் கண்மணி படத்தில் தான் விக்ரம் முதன்முதலில் அறிமுகமானார். அதன்பிறகு தந்துவிட்டேன் என்னை, மீரா, காவல் கீதம் என நடித்த அவருக்கு மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் மற்ற படங்களில் தாடியுடன் நடிக்க ஒப்புக்கொண்ட நிலையில், பம்பாய் படத்தில் தாடி எடுக்க மறுக்கவே அவருக்கு பதில் அரவிந்த் சாமி நடித்தார்.
1994 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கிய புதிய மன்னர்கள் படத்தில் நடித்த விக்ரமை, அப்படம் ரசிகர்களிடையே கொண்டு சேர்த்தது. அடுத்த 3 ஆண்டுகளுக்கு தெலுங்கு மற்றும் மலையாள படத்தில் நடித்த நிலையில் மீண்டும் 1997 ஆம் ஆண்டு அஜித் நடித்த உல்லாசம் படத்தில் 2வது ஹீரோவாக நடித்தார்.
சோதனையை கொடுத்த சேது
விக்ரம் 1999 ஆம் ஆண்டு பாலா இயக்குநராக அறிமுகமான சேது படத்தில் தான் தனி ஹீரோவாக நடித்தார். இந்த படம் உருவாவதற்குள் படாதபாடு பட்டது. சேது படத்தில் இருந்து விலகிவிட பலரும் சொல்லியும், அந்த படத்துக்காக விக்ரம் உழைத்த உழைப்பு தேசியவிருது கிடைக்க காரணமாக அமைந்தது. வாய்ப்பு கிடைக்கும் வரை தான் போராட்டம். அதன்பின் என்ன தில், தூள், ஜெமினி, காசி, சாமுராய், கிங், காதல் சடுகுடு, பிதாமகன், அருள், அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வ திருமகள்,தாண்டவம், மகான், கோப்ரா என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார் விக்ரம்.
அவரை ஒரு கேரக்டரில் அடக்கவே முடியாது. மொட்டை அடிக்க சொன்னால் அடிப்பார், கிலோ கணக்கில் எடை குறைக்க சொன்னாலும் செய்வார். கண் தெரியாமலும், மனநலம் பாதிக்கப்பட்டவராகவும், மூளை வளர்ச்சி குன்றியவராகவும், வெளியுலகமே தெரியாத நபராகவும் நடிக்க விக்ரமால் மட்டும் தான் முடியும்.
பன்முக கலைஞன் விக்ரம்
விக்ரம் சேதுவில் ஹீரோவாக நடிக்க முன் பல படங்களில் நடித்தாலும், மறுபக்கம் அஜித், வினீத், ஜெயராம், பிரபுதேவா, அப்பாஸ், ஜே.டி.சக்கரவர்த்தி என பலருக்கும் டப்பிங் கொடுத்துள்ளார். மேலும் பாடகராகவும் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருது, பிலிம்பேர் அவார்டு, எடிசன் விருது, மாநில அரசு விருதுகள் என அவர் தன் நடிப்புக்கு பெறாத அங்கீகாரமே இல்லை. கடைசியாக ஆதித்ய கரிகாலனாக நம்மை வசீகரித்த விக்ரம், அடுத்ததாக தங்கலானாக நம்மை கவர வரவுள்ளார். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!