பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி திரைப்பட டீசர் வெளியீட்டு விழா ஒன்றில் உருவக்கேலி செய்தததற்காக மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


மலையாள சினிமாவின் மெகா ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி 1980 ஆம் ஆண்டில் இருந்து சினிமாவில் நடித்து வரும் நிலையில் இன்றளவும் முன்னணி நடிகராகவே உள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்த அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 2022 ஆம் ஆண்டு மட்டும் மம்மூட்டிக்கு 5 படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக நண்பகல் நேரத்து மயக்கம், கிறிஸ்டோஃபர், கடுகன்னாவா ஒரு யாத்ரா, காதல்: தி கோர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 






இதற்கிடையில் 2018 ஆம் ஆண்டு நடந்த கேரள வெள்ளத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘2018’ என்ற படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. எழுத்தாளரும், இயக்குநருமான ஜூட் அந்தனி ஜோசப்பின் இந்த படத்தில் ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ், அஜு வர்கீஸ், தன்வி ராம், ஷிவதா மற்றும் கௌதமி நாயர் ஆகியோர் நடித்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இப்படம் ஒருவழியாக இப்போது தான் முடிவடைந்தது. 






2018 படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் மம்மூட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், இயக்குநர் ஜூட் ஆண்டனியின் தலைமுடி உதிர்வு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். தலையில் முடி இல்லாவிட்டாலும் அவர் அசாதாரண மூளையுடன் கூடிய மிகத் திறமையானவர் என மம்மூட்டி சொன்ன கருத்து இணையத்தில் கடும் எதிர்ப்புகளைப் பெற்றது. 


இதனால் அதிர்ச்சியடைந்த மம்மூட்டி, ஜூட் ஆண்டனியை பாராட்டி நான் பேசிய உற்சாகமான வார்த்தைகளால் சிலர் மனம் மனதை புண்படுத்தியதற்கு வருந்துகிறேன் என தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் தவறை சுட்டிக்காட்டிய ரசிகர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். இது மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதற்கு பதிலளித்துள்ள ஜூட் ஆண்டனி மம்மூட்டிக்கு என் மீதுள்ள அன்பை அறிவேன். என்  திறமையைப் பாராட்ட அவர் பயன்படுத்திய வார்த்தைகளை தவறாக சித்தரிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம் தனது முடி உதிர்வுக்கு பெங்களூர் மாநகராட்சியின் குடிநீர் விநியோகம் மற்றும் பல்வேறு ஷாம்பு பிராண்டுகள் தான் காரணம் என கிண்டலாக தெரிவித்துள்ளார்.