மலையாள சினிமாவின் இளம் நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜூ, தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறார். குறிப்பாக சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில், “தமிழ் சினிமாவின் அடுத்த அசின் மமிதா பைஜூதான்” என்ற கருத்தை பல ரசிகர்கள் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர். சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்த நிலையில் அசின் மற்றும் மமிதா பைஜூவை ஒப்பிட்டு ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் நேற்று முதல் பதிவிட்டு வருகிறார்கள்.
இன்று வெளியாக உள்ள விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் பாடல் காட்சிகளில் இடம்பெற்றுள்ள மமிதா பைஜூவின் தோற்றத்தையும், 2005-ஆம் ஆண்டு வெளியான கஜினி திரைப்படத்தில் அசின் நடித்த புகழ்பெற்ற “ரஹதத்துல்லா” பாடல் காட்சிகளையும் இணைத்து ரசிகர்கள் பல எடிட் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கவனம் பெற்று வருகின்றன.
தமிழ் சினிமாவில் அசின் பிடித்த இடம் மிகவும் தனித்துவமானது. எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்த அவர், குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவர்ந்த நடிகையாக உருவெடுத்தார். குறிப்பாக கவர்ச்சியை விட இயல்பான நடிப்பு, எளிமையான அழகு, தன்னம்பிக்கை மிக்க கதாபாத்திரங்கள் ஆகியவை அசினை மற்ற நடிகைகளிடமிருந்து வேறுபடுத்தின.
அவரது திரைப்பயணம் உச்சத்தில் இருந்தபோதே பாலிவுட்டுக்கு சென்ற அசின், பின்னர் திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து முழுமையாக விலகினார். தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் எடுத்த இந்த முடிவு பல ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்தது. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் அசின் போன்ற இயல்பான திரைமுகத்தைக் கொண்ட நடிகை யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் அடிக்கடி எழுந்து வந்தது.
அந்த இடத்தை நிரப்பக்கூடிய நடிகையாகவே தற்போது மமிதா பைஜூவை ரசிகர்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். பிரேமலு திரைப்படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் கவனம் பெற்ற அவர், அதிகமான மேக்கப் இல்லாத இயல்பான தோற்றம், துறுதுறுப்பான உடல் மொழி மற்றும் எளிதில் ரசிகர்களை கவரும் நடிப்பு ஆகியவற்றால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கியுள்ளார்.
இதன் காரணமாகவே அசினின் ஆரம்பகால திரைபயணத்தை நினைவுபடுத்தும் நடிகையாக மமிதா பைஜூவை பலர் குறிப்பிடுகின்றனர். ஒரு சில பாடல் காட்சிகள் அல்லது சமூக வலைதள எடிட்கள் மட்டுமே இந்த ஒப்பீட்டுக்கு காரணம் அல்ல. ரசிகர்களின் பார்வையில் அசின் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பக்கூடிய இயல்பான நட்சத்திரமாக மமிதா பைஜூ உருவெடுத்து வருவதுதான் இந்த விவாதத்தின் மையமாக உள்ளது.
