Mamannan Box Office : மாமன்னன் திரைப்படம் மூன்று நாட்களில் குவித்துள்ள வசூல் குறித்த விவரத்தை பார்க்கலாம்.


மாமன்னன் படம்


பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால்  என பலரும் நடித்துள்ள மாமன்னன் படம் ஜூன் 29ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்த படம் உதயநிதியின் கடைசிப்படம் என்பதால் ஒட்டுமொத்த திரையுலகமும், ரசிகர்களும் பெரிய எதிர்ப்பார்ப்புடன் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். 


மாமன்னன் படம் பட்டியலின மக்களின் அடையாளத்தையும், அரசியலையும், ஆதிக்க வர்க்கம் எப்படி தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. படம் பார்த்த பலரும் தங்களை பாதித்த வசனங்கள், காட்சிகள் குறித்த பல தகவல்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்த படம் நடிகர் வடிவேலுவின் ஆளுமைக்கு மற்றுமொரு சான்று என பாராட்டுகள் குவிந்து வருகிறது.


ஆதரவும் எதிர்ப்பும்


இதுஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் எப்படி மாரிசெல்வராஜ் இயக்கிய ’கர்ணன்' படத்திற்கு ஒரு கூட்டம் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தது. அதேபோல் தான் தற்போது 'மாமன்னன்’ படத்திற்கும் சம அளவில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.


மேலும், இந்த படம் அரசியல் வட்டாரத்திலும் பேசும் பொருளாக மாறியது. அதாவது, மாமன்னன் படம் பார்த்த பலரும் வடிவேலுவின் கேரக்டர் முந்தைய அதிமுக ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபாலை நியாபகப்படுத்துவதாக குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.  பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களே மேலோங்கி வருவதே வசூல் வேட்டைக்கு முக்கிய காரணமாக உள்ளது.


வசூல் எவ்வளவு?


அதன்படி, மாமன்னன் படம் வெளியான முதல் நாள்  இந்தியா முழுவதும் ரூ.5.50 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியானது. இரண்டாவது நாள் ரூ.4 கோடி வசூலித்ததாகவும் தகவல் வெளியானது.  பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரப்படி இத்தகவல் கிடைத்துள்ளது. ஆக மொத்தம் இரண்டு நாட்களில் இத்திரைப்படம் ரூ.10 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும்,  சனிக்கிழமையான நேற்று மீண்டும் ரூ.6 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமையான இன்றும்  ரூ.6 கோடி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, 3 நாட்களில் மாமன்னன் திரைப்படம் ஒட்டுமொத்தமாக ரூ.17 கோடி வசூல் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.


உதயநிதி ஸ்டாலினை வைத்து அருண்ராஜா இயக்கிய நெஞ்சுக்கு நிதி, மகிழ் திருமேனி இயக்கிய கலகத் தலைவன் போன்ற படங்கள் செய்ய முடியாத பாக்ஸ் ஆபிஸ் சாதனையை மாரி செல்வராஜ் மாமன்னன் படத்தின் மூலம் நிகழ்த்தி காட்டி உள்ளார்.  அதுவும் உதயநிதி நடித்த படங்களிலேயே அதிக வசூலை குவித்தது, அவரது கடைசி படமான மாமன்னன் தான். அதற்கு முக்கிய காரணம் வடிவேலு, பகத் ஃபாசிலின் நடிப்பும் தான், இப்படியொரு வசூலை குவித்துள்ளது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.