மனைவியை பழிவாங்க பிரபல நடிகர் நரேஷ் படமெடுத்துள்ள தகவல் தெலுங்கு திரையுலக ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. 


ரசிகர்களிடம் பேசுபொருளான “மல்லி பெல்லி” படம்


தமிழ் சினிமாவில், ‘எலந்த பழம்’ பாடலின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் மறைந்த நடிகை விஜய நிர்மலா. இவரின் மூத்த மகனான, நடிகர் நரேஷ்  200க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நரேஷ் பிரபல நடிகரான மகேஷ் பாபுவின் மூத்த சகோதரர் ஆவார். இதனிடையே தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகர் நரேஷ், பவித்ரா லோகேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'மல்லி பெல்லி'. பிரபல தயாரிப்பாளரான எம்.எஸ்.ராஜூ இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் அதில் இடம் பெற்ற காட்சிகள் நரேஷின் நிஜ வாழ்க்கையை தொடர்பாக இருப்பதாக கூறப்பட்டது. 


கூலாக பதிலளித்த நரேஷ்


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பை படக்குழு நடத்தினர். அப்போது பேசிய நரேஷிடம் பல கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு “மல்லி பெல்லி படம் என் நிஜ வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதா என என்னைக் கேட்டால் படம் பார்த்தால் புரியும் என சொல்வேன். இப்போதே எல்லாம் சொன்னால் சஸ்பென்ஸ் போய்விடும். இது ஒரு தனித்துவமான படம்” என அவர் தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய நரேஷிடம், ‘உங்கள் மூன்றாவது மனைவியை பழிவாங்க போறீங்களா?’ என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, ‘பழிவாங்க எவ்வளவு வழிகள் இருக்கும்போது நான் படத்தின் மூலம் என்ன பழிவாங்கி விட போகிறேன். ரூ,15 கோடி செலவு செய்து பழிவாங்க முயற்சிக்க முடியாது’ என அவர் கூறினார். அவரின் இந்த கருத்து இணையத்தில் வைரலானது. 


முன்னதாக நடந்த சம்பவம்


தெலுங்கு சினிமாவில்  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமான நரேஷ் பாபு, மூத்த நடன மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை மணந்தார். பின்னர் முறைப்படி விவாகரத்து பெற்று 2வதாக திரைப்பட பாடலாசிரியர் தேவுலபள்ளி கிருஷ்ண சாஸ்திரியின் பேத்தி ரேகா சுப்ரியாவை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து தன்னை விட 20 வயது சிறியவரான ரம்யா ரகுபதியை 3வது கல்யாணம் செய்துக் கொண்டார். இந்த நிலையில் தான் கன்னட நடிகை பவித்ரா லோகேஷை கடந்த மார்ச் மாதம் நரேஷ் 4வதாக திருமணம் செய்துக் கொண்டதாக கூறப்படுகிறது. 


முன்னதாக கடந்தாண்டு ஜூலை மாதம் ஹோட்டல் ஒன்றில் பவித்ராவுடன் தங்கியிந்த போது, நரேஷின் 3வது மனைவி ரம்யா தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் நரேஷின் சொத்துக்காகவே பவித்ரா கல்யாணம் செய்துக் கொண்டார் என அவரின் முதல் கணவர் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.