தி கேரளா ஸ்டோரி படம் திரையிடுவது தொடர்பாக தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


எதிர்ப்புகளைப் பெற்ற தி கேரளா ஸ்டோரி


இந்தியில் சுதிப்தோ சென் இயக்கத்தில்,  விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி”. இந்த படத்தில் அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு கடந்த மே 5 ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாவதாக இருந்தது. 


அதற்கு சில நாட்கள் முன்பு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. அதில், லவ்ஜிகாத் என்னும் பெயரில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு  மாற்றப்பட்டுள்ளனர். அவர்கள்  ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவது போல காட்சிகள் இடம் பெற்றிருந்ததோடு, இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 


இதனைத் தொடர்ந்து கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தொடங்கி பலரும் படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. எதிர்ப்புகள் கடுமையாக எழுந்ததால் 32 ஆயிரமாக இருந்த எண்ணிக்கை 3 ஆக மாற்றப்பட்டது. தி கேரளா ஸ்டோரிக்கு தடை கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவை தள்ளுபடி செய்யப்பட்டதால் திட்டமிட்டபடி மே 5 ஆம் தேதி படம் வெளியானது. 


தியேட்டரை முற்றுகையிட்டு போராட்டம் 


ஆனால் இப்படம் இந்தி மொழியை தவிர டப் செய்யப்பட்ட மாநில மொழிகளில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வெளியாகவில்லை. மேலும் படம் பார்த்த பலரும் தி கேரளா ஸ்டோரியை கடுமையாக விமர்சித்தனர். தியேட்டர் முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அங்கு வைக்கப்பட்ட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இப்படியாக பரபரப்பாக சென்ற நிலையில் தமிழ்நாட்டில் 2 நாட்கள் மட்டுமே படம் ஓடியது. 3 ஆம் நாளில் இருந்து காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. 


இதனைத் தொடர்ந்து மேற்கு வங்கம் இப்படத்திற்கு தடை விதித்தது. அதேசமயம் பாஜக ஆளும் சில மாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர்கள் படம் தி கேரளா ஸ்டோரி படத்தை பார்க்க வேண்டும் என வலியுறுத்தியதால் பெரும் பதற்றம் நிலவியது. 


உச்சநீதிமன்றம் நோட்டீஸ்


இதற்கிடையில் படத்திற்கு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தயாரிப்பாளர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “தி கேரளா ஸ்டோரி படம் பிற மாநிலங்களில் திரையிடப்படும் போது, மேற்கு வங்கத்தில் ஏன் தடை விதிக்கப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பினார். இதனையடுத்து தடை விதித்தது தொடர்பாக மேற்கு வங்க அரசு விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்தார். அதேபோல் தியேட்டர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு அரசு விளக்கமளிக்கவும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளார்.