மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஃபஹத் ஃபாசில். அசாத்திய நடிப்பு மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாலிக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதற்கான விவரங்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி மாலிக் திரைப்படம் வரும் 15-ஆம் தேதி அமேசானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தியேட்டர் எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையில் அதற்காக காத்திருப்பது நியாயமில்லை என மாலிக் இயக்குநர் ஆண்டோ ஜோசப் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையிலேயே இந்த ஓடிடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது. மாலிக் படம் ஓடிடி குறித்து நடிகர் பகத் பாசிலும் ஏற்கெனவே தன் கருத்தை பகிர்ந்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாலிக்கின் ஓடிடி வெளியீட்டு முடிவை கனத்த இதயத்துடன் இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள், நடிகர்கள் எடுத்துள்ளனர். மாலிக்கை உருவாக்கி முடிக்க அனைவரும் ஒருவருட காலத்திற்கு மேல் செலவிட்டுள்ளனர். என்னுடைய சமீபத்திய சில படங்கள் ஓடிடி ரிலீஸுக்காகவே எடுக்கப்பட்டது.
ஆனால் மாலிக் தொடக்கம் முதலே பிரம்மாண்ட தியேட்டர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் உருவாக்கப்பட்டது. 100% தியேட்டர் ரிலீஸ்தான் என நான் தயாராகவே இருந்த ஒரு திரைப்படம். இப்போது எடுக்கப்பட்ட ஓடிடி முடிவு அனைவராலும் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கும்படி அனைவரையும் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தியேட்டர்கள் இயல்புநிலைக்கு வரும் வரை என்னால் காத்திருக்க முடியாது, ஆனால் இன்று ஒவ்வொரு தனிமனிதனும் இயல்புநிலையை மீண்டும் பெற போராடுகிறார்கள். இந்த நேரத்தில் என்னால் ஒரு உறுதியை அளிக்க முடியும், அடுத்த முறை உங்களை தியேட்டரில் சந்திக்கும்போது உங்களுக்கு சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுப்பேன் எனக் குறிப்பிட்டிருந்தார்.
சமீபத்தில் பகத் நடிப்பில் வெளியான சி யூ சூன், ஜோஜி போன்ற பஹத்தின் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அது ஓடிடிக்கென்றே உருவாக்கப்பட்ட திரைப்படங்கள். ஆனால் பிரம்மாண்டமாக தியேட்டர் கொண்டாட்டத்துக்காக எடுக்கப்பட்ட மாலிக்கும் ஓடிடிக்குள் வருவது ரசிகர்களையும் சற்று சோகமாக்கியுள்ளது.
கொரோனா காலக்கட்டம் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் திரைப்படங்கள் ஓடிடி-ஐ நோக்கி படையெடுத்து வருகிறது. கடந்த வருடம் சிறு படங்களுடன் தொடங்கிய ஓடிடி தாக்கம் இன்று பெரிய படங்களையும் தன் பக்கம் இழுத்துள்ளது. தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் வேறு வழியில்லாமல் தயாரிப்பு நிறுவனங்களும் ஓடிடி நாடுகின்றனர்.
ஓடிடி ரிலீஸுக்கு தயாரானது சார்பட்டா பரம்பரை ! அப்செட்டில் ஆர்யா?