நடிப்பு அசுரன் என கொண்டாடப்படுபவர் நடிகர் ஃபஹத் பாசில். கொடுக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் கச்சிதமாக பொறுந்தக்கூடிய அளவிற்கு தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர். ஃபஹத் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் விக்ரம். கமல்ஹாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்கள் நடித்த விக்ரம் படத்தில் தனது பங்களிப்பை வெகுச்சிறப்பாக வெளிப்படுத்தினார் ஃபஹத். மலையாள சினிமாக்களையும் ஃபாலோ செய்யும் சினிமா ரசிகர்களுக்கு பஹத்தின் நடிப்பு தெரிந்த கதை. ஆனால் அவரை தமிழ் சினிமாவில் மட்டுமே பார்த்தவர்களுக்கு விக்ரம் படம் நிச்சயம் ரசிக்க வைத்திருக்கும். 


கோலிவுட்டில் விக்ரமுக்கு பிறகே பஹத் பலரிடத்திலும் சென்று சேர்ந்திருக்கிறார். இந்த நேரத்தில் அவரது நடிப்பில் வெளியாகி திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் மலையன்குஞ்சு. மலையாளப்படமான மலையன்குஞ்சு கடந்த வாரம் வெளியாகி பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது. வழக்கம்போல் கண்களால் மிரட்டி காட்சிகளை நகர்த்தி செல்கிறார் பஹத். நாயகன் மீண்டும் வரான் என மலையாள ரசிகர்கள் பாட்டு பாடும் அளவுக்கு பட்டையை கிளப்பியுள்ளார் பஹத். 


மலையாள சினிமாவின் வழக்கமான ஒன்லைன் ஸ்டோரி பாணியை கையில் எடுத்துக்கொண்டு மனித உணர்களை தட்டி எழுப்பி அதன்மேலே பயணித்துக்கொண்டிருக்கிறது மலையன்குஞ்சு.



சாஜிமோன் பிரபாகர் இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு மகேஷ் நாராயணன் கதை, திரைக்கதை எழுதி, ஒளிப்பதிவும் செய்துள்ளார்.குறிப்பாக இப்படத்துக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய பஹத் திட்டமிட்டதாகவும் இசைக்காக படத்தைப் பார்த்த ரகுமான் படத்தால் ஈர்க்கப்பட்டு மெனக்க்கெடல் எடுத்து இசையை கொடுததாகவும் கூறப்படுகிறது. ரஹ்மானின் இந்த செயலால் ஈர்க்கப்பட்ட பஹத் தியேட்டரில் ரிலீஸ் செய்ய முன்வந்துள்ளார்.


இப்படியாக ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ள மலையன்குஞ்சு வெளியான 5 நாட்களில் 7 கோடி ரூபாயை தாண்டி வசூல் சென்றுகொண்டிருக்கிறதாம். மலையாள சினிமாவை பொறுத்தவரை செலவே இல்லாமல் படத்தை எடுத்துவிடுவதால் 7 கோடி என்பதே பாக்ஸ் ஆபிஸ் வசூல்தான். அந்த வகையில் மலையன்குஞ்சு வசூலில் பட்டையைக் கிளப்புவதாகவே மோலிவுட் கூறுகிறது.