மம்மூக்கா என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி இன்று தனது 72 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். சினிமாவில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் மம்மூட்டியிடம் இளம் நடிகர்கள் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றன.
ஒரு குட்டி இண்ட்ரோ
1971 ஆம் ஆண்டு வெளியான அனுபவன் பாலிச்சக்கல் என்கிறப் படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார் மம்மூட்டி. திரைப்படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் இருந்தாலும் தனது குடும்பச் சூழல் காரணமாக திருமணம் செய்துகொண்டு வழக்கறிஞர் வேலையைத் தொடர்ந்து வந்தார். பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு எம்.டி.வாசுதேவன் நாயர் திரைக்கதை எழுதிய விள்கனுண்டு ஸ்வப்னங்கள் என்கிறப் படத்தில் நடித்தார். இதனைத் தொடர்ந்து மலையாள சினிமாவின் அத்தனை முக்கியமான இயக்குநர்களுடனும் பணியாற்றியிருக்கிறார்.
1980 களில் மலையாள சினிமாவின் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தைப் பெற்றார் மம்மூட்டி. ஆனால் தனது ஸ்டார் அடையாளத்தை எந்த வகையிலும் தனது நடிப்பிற்கு தடையாக வர அவர் அனுமதிக்கவில்லை. ஒரே நேரத்தில் மிகப் பெரிய இயக்குநர்களுடனும் அதே நேரத்தில் அறிமுக இயக்குநர்களுடனும் வேலை செய்திருக்கிறார். கேரளாவில் கமர்ஷியல் சினிமா ஒரு புறமிருக்க மறுபக்கம் பேரலல் சினிமாக்களை இயக்கி வந்த அதூர் கோபாலகிருஷ்ணனின் படங்களில் விரும்பி நடித்தார். தனது கதாபாத்திரம் எவ்வளவு பெரிதா சின்னதா என்கிற கவலை அவருக்கு இருந்ததில்லை. நல்ல கதையை ஒருவர் படமாக்க நினைக்கிறார் என்றால் அதில் தனது பங்கு இருக்க வேண்டும் என்று எப்போது நினைத்தவர் மம்மூட்டி.
தமிழில் மம்மூட்டி
மெளனம் சம்மதம் என்கிற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் மம்மூட்டி. மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் அவர் நடித்த தேவா கதாபாத்திரம் இனி ஒருவர் ஈடுசெய்ய முடியாத அளவிற்கு நிலைத்துவிட்டது. தொடர்ந்து மறுமலர்ச்சி, ஆனந்தம் உள்ளிட்டப் படங்களின் நடித்தார். சில காலம் தமிழ் சினிமாவில் தோன்றாத மம்மூட்டி ராம் இயக்கிய பேரன்பு படத்தின் மூலமாக ரீஎண்ட்ரி கொடுத்தார்.
விருதுகள்
கிட்டதட்ட 400 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மம்மூட்டி 3 முறை தேசிய விருதையும் 7 முறை கேரள மாநில அரசின் விருதையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டும் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்காக 8 ஆவது முறையாக மாநில விருதை வென்றார்.
மம்மூட்டி இன்று
இன்று மம்மூட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்து வரும் இரண்டு படங்கள் குறித்தான தகவல்கள் வெளியாக இருக்கின்றன. டீனோ டெனிஸ் இயக்கத்தில் உருவாகி வரும் ஃபர்ஸ்ட் லுல் போஸ்டர் முன்னதாக வெளியாகி இருக்கும் நிலையில் இன்று மற்றுமொரு போஸ்டரை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கலா. அடுத்ததாக மலையாளத்தில் பூதகாலம் படத்தை இயக்கிய ராகும் சதாசிவன் இயக்கும் ஹாரர் திரைப்படமான பிரம்மயூகம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும். மேலும் மம்மூட்டி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கன்னூர் ஸ்குவாட் திரைப்படத்திற்கான முன்னோட்ட வீடியோ ஒன்றும் வெளியாக இருக்கிறது. இன்று வெளியாகும் ஜவான் திரைப்படத்தின் திரையிடலுக்கு முன்பாக திரையரங்குகளில் இந்த டீசர் வெளியாகும் என தெரியவந்துள்ளது.