கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' திரைப்படம் பிரெஞ்சு திரைப்படமான ’குங் ஃபு ஸோரா’ திரைப்படத்தின் காப்பி என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


தர்ஷனா ராஜேந்திரன், பேசில் ஜோசப் நடிப்பில் இயக்குநர் விபின் தாஸ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான திரைப்படம் ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' . இந்தத் திரைப்படம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது.


இந்நிலையில் இந்தப் படம் 2021ஆம் ஆண்டு வெளியான பிரெஞ்சு திரைப்படமான குங்ஃபூ ஸோரா திரைப்படத்தின் காப்பி என்ற சர்ச்சை சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. குங்ஃபூ ஸோரா திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள், கதை, காட்சி அமைப்பு ஆகியவை கிட்டத்தட்ட ’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' திரைப்படத்துடன் ஒத்துப்போவதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


 



இது குறித்து இயக்குநர் விபின் தாஸை விமர்சித்து வந்தனர். இந்நிலையில் இது குறித்து இயக்குநர் விபின் தாஸ் விளக்கமளித்துள்ளார். ”’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே' திரைப்படம் அது வெளியாவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியான இன்னொரு பிரெஞ்சு திரைப்படத்தின் காப்பி என்று சமூக வலைதளங்களில் எழுதி வருவது வருத்தமளிக்கிறது.


நானும் அந்த காட்சிகளைப் பார்த்தேன். எனக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. இரண்டு படங்களிலும் இடம்பெற்ற காட்சிகளைப் பார்க்கும்போது பல ஒற்றுமைகள் இருக்கிறது. ஆனால் இப்படி ஒரு படம் இருப்பதே நாங்கள் வேலை செய்யும்போது தெரியாமல் போய்விட்டது. ஆறு மாதங்களுக்கு முன்பு வெளியான திரைப்படத்தை காப்பி செய்து வெளியிடுவது சுலபமல்ல என்பதை அறிவாளிகள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன். ஜனவரி 2020லேயே எனது படத்தின் ஸ்க்ரிப்ட் லாக் ஆகிவிட்டது.


 நான் அனுப்பியுள்ள பிடிஎஃப்பில் சண்டைக்காட்சி அமைப்புகள் குறித்து தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். இதற்கான ஆதாரத்தையும் கொடுத்திருக்கிறேன். 2021 ஜனவரியில் இருந்து தயாரிப்பாளர்கள், நடிகர்களை அணுகி டிசம்பரில் தான் பேசில் ஜோஸப், தர்ஷனா, சியர்ஸ் மீடியா ஆகியோர் வருகின்றனர்.


மார்ச் 9ஆம் தேதி பிரெஞ்சில் வெளியானாலும் அதற்கு அடுத்தடுத்த மாதங்களில் தான் பிற மொழிகளில் வெளியானது. ஜெயஜெயஜெயஜெய ஹே திரைப்படம் மே மாதம் படப்படிப்பு தொடங்கி ஜூன் மாத்ததின் நடுவிலேயே முடிந்துவிட்டது. இந்தியாவில் வெளியாகாத பிரெஞ்சுப் படம் ஆகஸ்ட் 2022இல் தான் ஓடிடியில் வெளியாகியிருக்கிறது.


அதன் ட்ரெய்லரை பார்த்து காப்பியடித்திருக்கிறோம் என்று நினைத்தாலும் அப்படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகிறது. ஆனால் அதற்கு ஓராண்டுக்கு முன்பே ஸ்க்ரிப்ட்டை அனுப்பியிருக்கிறேன். பிரெஞ்சு படத்திலிருந்து எதையும் காப்பியடிக்கவில்லை. இதுபோன்று மோசமாக பிரச்சாரம் செய்பவர்களை சட்டரீதியாக சந்திக்கவும் முடிவு செய்துள்ளோம்” என்று இயக்குநர் விபின் தாஸ் விளக்கமளித்துள்ளார்.