படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி அம்மா மற்றும் மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் பிரபல மலையாள இயக்குநர் ஜாசிக் அலி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமாவில் பாலியல் புகார்கள்
சினிமா உலகை பொறுத்தவரை பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பான புகார்கள் அவ்வப்போது எழுவது வழக்கம். இதில் பிரபலங்கள், சினிமா பெயரை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் என அனைவருமே குற்றச்சாட்டு ஆளாகின்றனர். சமீபகாலமாக மீ டூ இயக்கம்மூலம் இதுபோன்ற புகார்கள் உடனுக்குடன் வெளிச்சத்திற்கு வருகின்றன. இப்படியான நிலையில் மலையாள திரையுலகில் பாலியல் வழக்கில் இயக்குநர் ஜாசிக் அலி கைது செய்யப்பட்டுள்ளார்.
வாய்ப்பு தருவதாக மோசடி
கோழிக்கோடு குருவங்காட்டைச் சேர்ந்தவர் ஜாசிக் அலி. இவர் பைனரி என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் கடந்த மே மாதம் 26 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. கைலாஷ், ஜாய் மேத்யூ மற்றும் நிர்மல் பலாஜி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள பைனரி படம் எதிர்பாராதவிதமாக வேலையில்லாமல் போகும் ஐந்து இளைஞர்களைச் சுற்றிய கதையாக அமைக்கப்பட்டிருந்தது.
இதனிடையே இயக்குநர் ஜாசிக் அலி, கேரளாவைச் சேர்ந்த பெண்ணிடம், ‘உன்னை ஹீரோயினா மாற்றுகிறேன்’ என்று ஆசை வார்த்தை கூற, சினிமா கனவில் இருந்த சம்பந்தப்பட்ட பெண்ணும் அதனை நம்பியுள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட ஜாசிக் அலி சினிமா காட்சிகள் எடுக்க வேண்டும் என கூறி அப்பெண்ணை கேரளாவில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
தலைமறைவான ஜாசிக் அலி
அப்போது அப்பெண்ணை ஜாசிக் அலி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண் தனது தாயிடம் சொல்ல அவர் கோயிலாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் தன்னை தேடுவதை அறிந்ததும் ஜாசிக் அலி தலைமறைவானார். இந்நிலையில் பல நாட்கள் தேடுதலுக்குப் பின் நடக்காவிலுள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டார்.
ஜாசிக் அலி பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்படும் பெண்ணுக்கு இன்னும் 18 வயது பூர்த்தியாகவில்லை. இதனால் அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு தான் அப்பெண்ணின் தாய்க்கும் பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் ஜாசிக் அலி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளியே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.