வெங்கட் பிரபு  படங்கள் என்றால் தனக்கு அவ்வளவு பிடிக்கும், ஆனால் அவரது படத்தில் நடிக்க முடியாமல் போனது என தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன்.


தி கோட்


வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் தி கோட் (The GOAT). ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். 


கடந்த ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டை முன்னிட்டு தி கோட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இந்தப் படத்தில் விஜய் தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சென்னை, ஹைதராபாத், இலங்கை, தாய்லாந்து, இஸ்தான்புல், மாஸ்கோ உள்ளிட்ட நாடுகளில் தி கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் முதல் பாடல் இந்த மாதம் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரஷாந்த், பிரபுதேவா, சினேகா, மினாக்‌ஷி செளதரி, லைலா, மோகன், பிரேம்ஜி, வைபவ் ஆகியோர் இப்படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது குறித்து மலையாள இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் பகிர்ந்துள்ளார்.


வினீத் ஸ்ரீனிவாசன்


மலையாளத்தில் நிவின் பாலி நடித்த தட்டத்தின் மறையத்து, ஜேகோபிண்டே ஸ்வர்கராஜ்யம், கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான ஹ்ரிதயம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் வினீத் ஸ்ரீனிவாசன். தற்போது அவர் இயக்கியுள்ள படம் வருஷங்களுக்கு சேஷம். இப்படத்தில்  நடிகர் மோகன்லாலின் மகனான பிரனவ் மோகன்லால், நிவின் பாலி, பாசில் ஜோஸப், நடிகை கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள்.


இரு இளைஞர்கள் சினிமாவின் மீது இருக்கும் ஆர்வத்தினால் 1980களில் சென்னை கோடம்பாக்கத்திற்கு கிளம்பி வருவதும் அதைத் தொடர்ந்து நிகழும் கதையை நகைச்சுவை கலந்து படமாக்கி இருக்கிறார் வினீத் ஸ்ரீனிவாசன். வரும் ஏப்ரல் 11ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. தமிழில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. திரைப்படங்கள் இயக்குவது தவிர்த்து பல்வேறு வெற்றிப்படங்களிலும் நடித்துள்ளார்.


கோட் படத்தில் நடிக்க நிராகரித்த இதுதான் காரணம்






இந்தப் படத்தின் ப்ரோமோஷன் தொடர்பாக நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் வினீத் ஸ்ரீனிவாசன் கோட் படத்தில் நடிக்க தனக்கு அழைப்பு வந்ததாகவும், ஆனால் அப்போது தான் தனது படத்தை இயக்கிக் கொண்டிருந்ததால் இந்தப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நிராகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். வெங்கட் பிரபுவின் படங்கள் என்றால் தனக்கு அவ்வளவு பிடிக்கும் ஆனால், அவர் இயக்கத்தில் விஜய் படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது என்றும் தனது வருத்தத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் வினீத்.