"இன்னும் பயந்துகொண்டுதான் இருக்கிறேன்" : மனம் திறந்தார் நடிகை பாவனா!

பிரபல நடிகை பாவனா தனக்கு நேர்ந்த அநீதி பற்றியும், அதன் பிறகு தனக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் முதன் முறையாக மனம் திறந்து பேசியிருக்கிறார். உலக மகளிர் தினத்தை முன்ன்னிட்டு 'வி த வுமன் ஆஃப் ஆசியா' கூட்டமைப்புடன் இணைந்து நடத்திய குளோபன் டெளன் ஹால் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாவனா தனக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.


மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் (Barkha Duty) கேட்ட கேள்விகளுக்கு நடிகை பாவனா பதிலளித்து பேசுகையில், "என் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய சம்பவங்கள் நடந்தன. மிகவும் கடினமான பயணத்தை நான் மேற்கொண்டு வருகிறேன். நான் பாதிக்கப்பட்டவள் அல்ல வாழ்க்கையில் மீண்டு வந்தவள். இதற்கு முடிவு கிடைக்கும்வரை நான் போராடுவேன். நீதிக்கான போராட்டம் அவ்வளவு எளிதானது அல்ல. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் அதுபற்றி விரிவாக கூறவில்லை. நான் 15 முறை கோர்ட்டு விசாரணைக்காக சென்று வந்தேன்.


மீண்டும் மீண்டும் அவர்கள் கேட்ட கேள்விகளை நான் கடந்து வந்தேன். நான் நிரபராதி என தெளிவுபடுத்தும் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டேன். என் தந்தை இருந்திருந்தால் இதுபோன்ற ஒரு சூழ்நிலையை நான் எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.

ஐந்து ஆண்டுகளின் எனது பயணம் கடினமானதாக இருந்தது. பாதிப்பில் இருந்து வாழ்க்கையை நோக்கிய பயணமாக அது இருந்தது. சமூக வலைத்தளங்களில் எனக்கு எதிராக செய்யப்பட்ட பிரசாரங்கள் என்னை வேதனைப்படுத்தியது. சிலர் காயப்படுத்தியதுடன், அவதூறு பிரசாரங்களும் செய்தனர். நான் பொய் சொல்லுவதாகவும், இது பொய் வழக்கு எனவும் சிலர் சொன்னார்கள். சிலர் என்மீது குற்றம் சொன்னார்கள். என்னை தனிப்பட்ட முறையில் தகர்க்கும் விதமான சூழ்நிலையும் ஏற்பட்டது. மோசமாக வளர்க்கப்பட்டவள் என்று பலரும் சொன்னார்கள்.




ஒரு கட்டத்தில் எல்லாம் எனக்கு போதும் என எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் சொன்னேன். சிலர் எனக்கு ஆதரவாக இருந்தனர். நடிகைகள் சங்கம் (WCC) எனக்கு ஆதரவாக செயல்பட்டது. என்னுடன் பக்கபலமாக நின்றவர்களுக்கு நன்றி. நான் தொடர்ந்து போராடுவேன். நான் செய்தது சரி என்பதை தெளிவுபடுத்துவேன். எனது மரியாதை எனக்கு திரும்ப கிடைக்க வேண்டும். தனிப்பட்ட முறையில் இன்னும் நான் பயந்துகொண்டுதான் இருக்கிறேன். அது எதர்க்காக என்பதற்கு என்னிடம் விடை இல்லை.




தொழில் மறுக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. அப்போது சிலர் எனக்கு வாய்ப்பு வழங்கினார்கள். அதை நான் வேண்டாம் என மறுத்தேன். இந்த சமூகம் பெண்களை வேறுகோணத்தில் பார்க்கிறது. அது மாற வேண்டும். மீண்டு வருபவர்களை சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். இந்த நிகழ்ச்சி குறித்து மூத்த பத்திரிகையாளர் பர்கா தத் தனது இன்ஸ்டாகிராமில் 'நடிகை மவுனம் கலைக்கிறார். ஓர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேரளத்தின் பெரிய சினிமா பிரபலம் எதிர்கொண்டது எப்படி என கூறுகிறார்' என பதிவிட்டிருந்தார்.