தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளவர் சீனு ராமசாமி. ’கூடல் நகர்’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் தென்மேற்குப் பருவக் காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட வெற்றிப் படங்களை இதுவரை கொடுத்து உள்ளார்.
இவரது இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள, மாமனிதன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா ஊரடங்கு காரணமாக வெளியீடு தேதி தள்ளிப்போன வண்ணம் உள்ளன. இவரது இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம், ’இடிமுழக்கம்’. என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் இந்த பாடம் தயாராகி வருகிறது.
இடிமுழக்கம் படத்தில் கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள பாடலை ஒன்றை வினித் ஸ்ரீனிவாசன் பாடியுள்ளார். இவர் மலையாள திரையுலகில் நடிகர், பாடகர், இயக்குநர் எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவராக வலம் வருகிறார்.
இதுகுறித்து படத்தின் இயக்குநர் சீனு ராமசாமி பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்து உள்ளார்.
அவர் கூறுகையில், ”வினித் பாடியுள்ள இந்தப் பாடல் படத்தின் ஒரு முக்கியமான தருணத்தில் வருகிறது. அப்பாடல் காதல் மற்றும் நட்பைப் பற்றிப் பேசுகிறது. எங்களுக்கு ஒரு 'அன்பான' குரல் கொண்ட ஒரு பாடகர் தேவைப்பட்டார்.
நீண்ட யோசனைக்குப் பிறகு, வினித் ஸ்ரீனிவாசன் அதற்குப் பொருத்தமானவராக இருப்பார் என்பது எனக்குத் தோன்றியது. நான் அவரை ஒரே ஒரு முறை தான் சந்தித்து இருந்தாலும், முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துவிட்டது. நான் அவரது குரலின் தீவிர ரசிகன் மற்றும் அவரது பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டு இருக்கிறேன். நான் அவரது பெயரை ரகுநந்தனுக்கு பரிந்துரைத்தேன்.
அவருக்கும் அந்த யோசனை பிடித்திருந்தது. நாங்கள் அவரை அணுகினோம். அவர் என் வேலையை விரும்புவதாக என்னிடம் சொன்னபோது நான் மகிழ்ச்சியடைந்தேன். அவர் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்தார். ஆனால் பாடலைப் பதிவு செய்யச் சென்னைக்கு வந்தார்.
’பூமலரும் காலம் இது யார் அறிவார்’ என தொடங்கும், இந்த பாடல் நன்றாக வந்துள்ளது. நாங்கள் இந்த பாடலின் ரஃப் காப்பியை அவருக்கு அனுப்பி இருந்தோம். அவருக்கு அது பிடித்திருந்தது. அதனால் சென்னை வந்து பாடல் பாடி கொடுத்தார். மேலும் பாடலின் டியூன்னிற்கு ஏற்றது போல் அவரது குரல் அமைந்துள்ளது. இந்த பாடல் வெளியாகும் தேதி குறித்து விரைவில் நான் அறிவிப்போம் “ என்று தெரிவித்து உள்ளார்.