தென்னிந்திய சினிமா தொடங்கி பாலிவுட் வரை பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன்.  ‘பட்டம் போலே’ எனும் மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா,  உலகப் புகழ்பெற்ற இயக்குநர் மஜித் மஜிதியின் ‘பியாண்ட் த க்ளவுட்ஸ்’ எனும் இந்தி படத்தில் நடித்து இந்திய அளவில் கவனமீர்த்தார்.


கோலிவுட் எண்ட்ரி


தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிகர் ரஜினிகாந்தின் ‘பேட்ட’ படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா, விஜய்யுடன் மாஸ்டர், தனுஷ் உடன்  மாறன் ஆகிய படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களுக்கு பரிச்சயமான முகமானார்.


ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி தனது இன்ஸ்டா பக்கத்தின் மூலம் இதயங்களைக் குவித்து ஆக்டிவ்வான நபராக வலம் வரும் மாளவிகா, தன் ரசிகர்களுடன் உரையாடுவது, தன் தினசரி பற்றிய அப்டேட்களை வழங்குவது,  கணக்கில்லாமல் ஃபோட்டோக்கள் அப்லோட் செய்து இண்டர்நெட் சென்சேஷனாக வலம் வருவது என இணைய உலகில் படு பிஸியாக வலம் வருகிறார்.


முதன்முறை விக்ரமுடன் கூட்டணி


இச்சூழலில், இவர் முதன்முறையாக இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் நடிகர் விக்ரமுடன் கைக்கோர்த்துள்ள திரைப்படம் தங்கலான்.  


ஸ்டுடியோ க்ரீன் - நீலம் ப்ரொடக்ஷன்ஸ் இணைந்து  பெரும் பொருட்செலவில் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பான் இந்திய திரைப்படமாக இப்படம்  உருவாகியுள்ளது.


நம்ம மாளவிகாவா இது?


கோலார் தங்க சுரங்கத்தில் தங்கத்துக்காக பழங்குடியின் மக்கள் சுரண்டப்பட்டதை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ள இப்படம் பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. இப்படத்துக்காக விக்ரம் போட்டுள்ள கடும் உழைப்பு ஏற்கெனவே ரசிகர்களை ஈர்த்திருந்த நிலையில், இன்று வெளியான டீசரில் அபோகலிப்டோ பாணியிலான பழங்குடி இனத் தலைவராக அவர் தோன்றியுள்ளது ரசிகர்களை ஈர்த்துள்ளது.


இந்நிலையில், பொதுவாக தன் படங்களிலும் தன் இன்ஸ்டா பக்கத்திலும் பார்பி டாலாக கலர் கலர் உடைகளில் தோன்றிய மாளவிகா, அவற்றிலிருந்து வேறுபட்டு மிரட்டலான பழங்குடிப் பெண்ணாக தோன்றியுள்ள காட்சி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


 



மிரட்டலான தோற்றத்தில் அவர் அலறும் காட்சியைப் பார்த்து நம்ம மாளவிகாவா இது என ரசிகர்கள்  இதயங்களை வாரி வழங்கி வருகின்றனர்.


இவர்கள் தவிர நடிகை பார்வதி, நடிகர் பசுபதி உள்ளிட்டோரும் கவனமீர்த்துள்ள நிலையில், டீசரில் ஜி.வி.பிரகாஷின் இசையும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. வரும் ஜனவரி 26ஆம் தேதி தங்கலான் திரைப்படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.