விமர்சனங்கள் தன்னை பாதிக்காதபடி தனது கணவரும் பெற்றோர்களும் தன்னை காப்பற்றியதாக பிரியாமணி தெரிவித்துள்ளார்.


பிரியாமணி


பாரதிராஜா அறிமுகப்படுத்திய திறமையான நடிகைகளில் ஒருவர் பிரியாமணி. பாரதிராஜா இயக்கிய கண்களால் கைது செய் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். ஆனால் பிரியாமணியை முத்தழகாக அறிமுகம் காட்டியது அமீர் இயக்கிய பருத்திவீரன் படம் தான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தொடர்ச்சியாக நடித்து வரும் பிரியாமணி  நடித்த இரண்டு படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. யாமி கெளதம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து சர்ச்சைக்கு உள்ளான ஆர்ட்டிகிள் 370 படத்தில் பிரியாமணியின் கதாபாத்திரம் கவனம் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது அஜய் தேவ்கன் நடிப்பில் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் மைதான் படத்தில் நடித்துள்ளார் பிரியாமணி. 


பிரியாமணி திருமணம்


கடந்த 2017ஆம் ஆண்டு முஸ்தஃபா ராஜ் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் பிரியாமணி. ஏற்கெனவே ஆயிஷா என்பவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் முஸ்தஃபா ராஜ். திருமணத்தைத் தொடர்ந்து பலவிதமான சர்ச்சைகளை சந்தித்து வருகிறார் பிரியாமணி. குறிப்பாக முஸ்தஃபாவின் முன்னாள் மனைவி ஆயிஷா தனக்கும் தனது கணவருக்கும் இன்னும் முறையாக விவாகரத்து ஆகவில்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். மேலும் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட காரணத்தினால் சமூக வலைதளங்களில் பலவிதமான விமர்சனங்களை எதிர்கொண்டார் பிரியாமணி. சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இந்த விமர்சனங்களை தான் எதிர்கொண்ட விதம் குறித்து அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.


‘என்னையும் என் பெற்றோரையும் பாதித்தது’


”எனது திருமணத்தைத் தொடர்ந்து என் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் என்னை அதிகம் பாதித்தன. என்னை மட்டும் இல்லை என் அம்மா அப்பாவையும் இந்த விமர்சனங்கள் பாதித்தன. ஆனால் எல்லாவற்றுக்கும் இடையில் என் கணவர் என்னுடன் உறுதியாக நின்றார். “என்ன பிரச்சனையாக இருந்தாலும் முதலில் என்னைக் கடந்துதான் உன்னை வந்து சேரவிடுவேன்” என என் கையை பிடித்துக் கொண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னுடன் இருக்கும்படி அவர் என்னிடம் சொன்னார்.


இப்படி ஒரு உறுதியான கணவன் அமைவதற்கு நான் கொடுத்துவைத்திருக்க வேண்டும். பிரச்னைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவருக்கு தெரியும். அதே நேரம் இந்த விமர்சனங்கள் என் பெற்றோரை பாதிக்காமல்  இருக்க நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுத்தோம் . அவர்களின் ஆசீர்வாதம் தான் எங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது” என்று பிரியாமணி தெரிவித்துள்ளார்.