தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபுவின் மகன் கௌதம் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பயிற்சிபெற்று நடிப்புப் பயணத்தில் கால் பதித்துள்ளார்.


டோலிவுட் ப்ரின்ஸ் மகேஷ் பாபு


தெலுங்கு சினிமாவில் பெரும் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்களை வழங்கி கடந்த 23 ஆண்டுகளாக வெற்றிகரமான நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. பழம்பெரும் டோலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் கிருஷ்ணாவின் மகனான மகேஷ்பாபு, குழந்தை நட்சத்திரமாக தன் நடிப்புப் பயணத்தை டோலிவுட் திரையுலகில் தொடங்கி, பின் 2001ஆம் ஆண்டு ‘முராரி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி, தன் முதல் படத்திலேயே குடும்ப ஆடியன்ஸ்களைக் கவர்ந்தார்.


அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்‌ஷன் ரூட் பிடித்துச் சென்று, ‘டோலிவுட்டின் ப்ரின்ஸ்’ எனும் அடைமொழியைப் பெற்று, தற்போது தவிர்க்க முடியாத சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவராக தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார்.


மகேஷ் பாபுவின் மகன்




நடிகை நம்ரதாவை 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட மகேஷ் பாபுவுக்கு கௌதம், சித்தாரா என 2 வாரிசுகள் உள்ளனர். மூத்தவரான மகன் கௌதமுக்கு தற்போது 18 வயது நிரம்பியுள்ள நிலையில், அவர் சமீபத்தில் தான் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தன் பள்ளிப் படிப்பை முடித்தார். 


தன் தந்தை போலவே சிறுவயது முதல் நடிகராக வேண்டும் என்ற கனவுடன் வலம் வந்த கௌதம் தற்போது லண்டனில் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக தன் முதல் மேடை நாடகத்தில் பர்ஃபார்ம் செய்து, தன் நடிப்புப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.


மகனை நினைத்துப் பெருமை!


கௌதமின் பர்ஃபாமன்ஸைக் கண்டுகளித்த மகிழ்ச்சியுடன் இது குறித்த பதிவிட்டுள்ள தாய் நம்ரதா ஷிரோத்கர், “இந்த சிறப்பு வாய்ந்த மாலைப் பொழுதில் கௌதமை நினைத்து பெருமைப்படுகிறேன். அவரது முதல் நாடக மேடை நிகழ்ச்சி லண்டனில் நடந்து முடிந்துள்ளது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது” எனக் கூறியுள்ளார். ஏற்கெனவே குழந்தை நட்சத்திரமாக தன் அப்பாவுடன் இணைந்து ‘நேனொக்கடின்’ படத்தில் நடித்திருந்த கௌதம், விரைவில் டோலிவுட்டில் ஹீரோவாக எண்ட்ரி கொடுப்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


 






மகேஷ் மகள் சித்தாராவுக்கு தற்போது 11 வயது நிரம்பியுள்ள நிலையில், அவரும் நடிப்பில் ஆர்வம் காண்பித்து வருவது குறிப்பிடத்தக்கது.


மகேஷ் பாபு இறுதியாக நடித்த குண்டூர் காரம் திரைப்படம் கலவையான விமர்சனங்கள் தாண்டி ஹிட் அடித்த நிலையில், அடுத்ததாக உச்ச இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியுடன் மகேஷ் பாபு கைகோர்க்கவுள்ளார். இந்தப் படத்தினை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.