காலமடைந்த தனது தந்தையின் நினைவாக மகேஷ் பாபு, அவரது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.


தெலுங்கு சினிமாவின் தற்போதைய முன்னணி நடிகர்களுள் ஒருவரான மகேஷ் பாபுவின் தந்தையான இவர் 1961ஆம் ஆண்டு முதல் இதுவரை 350க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிப்பு மட்டுமல்லாமல் தயாரிப்பு, இயக்கம் ஆகிய துறைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட கிருஷ்ணா தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தார். 


இதனிடையே 79 வயதான நடிகர் கிருஷ்ணாவுக்கு அதிகாலை (நவ.14) மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தார். அவருக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து உடல்நிலை மோசமானதால் வெண்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல்  கிருஷ்ணா உயிரிழந்தார். அவரது மறைவு செய்தி ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.






அவரது மறைவுக்கு இந்திய திரையுலகினர் சமூக வலைத்தளம் மூலம் இரங்கல் தெரிவித்தனர். தமிழ் திரையுலகில் நடிகர்கள் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், சிபி சத்யராஜ், நடிகை ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். தந்தை, தாய், சகோதரர் என ஒரே ஆண்டில் 3 குடும்ப உறுப்பினர்களை இழந்து துயரத்தில் இருக்கும் மகேஷ்பாபுவுக்கு டோலிவுட் திரையுலகினரும் அவரது ரசிகர்களும் இன்றளவும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.






தற்போது  மகேஷ்பாபு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது தந்தையான சுரேஷின் பழைய போட்டோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், “உங்கள் வாழ்க்கை கொண்டாடப்பட்டது... உங்கள் மறைவு இன்னும் கொண்டாடப்படுகிறது... அதுதான் உங்கள் மகத்துவம். நீங்கள் உங்கள் வாழ்க்கையை அச்சமின்றி வாழ்ந்தீர்கள்...  துணிச்சல் உங்கள் இயல்பு. எனது உத்வேகம்... எனது தைரியம்... நான் எதிர்பார்த்தது மற்றும் முக்கியமானவை அனைத்தும் அப்படியே போய்விட்டன. ஆனால் வினோதமாக, இதுவரை நான் உணராத இந்த வலிமையை என்னுள் உணர்கிறேன்... இப்போது நான் அச்சமற்றவனாக இருக்கிறேன்... உங்களது ஒளி என்றென்றும் என்னுள் பிரகாசிக்கும்... உங்கள் பெயரையும் புகழையும் முன்னெடுத்துச் செல்வேன்... உங்களை மேலும் பெருமைப்படுத்துவேன். … லவ் யூ நானா.. என்னுடைய சூப்பர் ஸ்டார்” என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.