தந்தை, தாய், சகோதரர் என ஒரே ஆண்டில் 3 குடும்ப உறுப்பினர்களை இழந்து துயரத்தில் இருக்கும் மகேஷ்பாபுவுக்கு டோலிவுட் திரையுலகினரும் அவரது ரசிகர்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


டோலிவுட்டின் ’ப்ரின்ஸ்’ என ரசிகர்களால் வாஞ்சையாக அழைக்கப்படும் மகேஷ் பாபு, தெலுங்கு தேசம் தாண்டி உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.


மகேஷ் பாபுவின் தந்தை கிருஷ்ணா


இவரது தந்தையும் தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த நடிகருமான கிருஷ்ணா நேற்று அதிகாலை 79ஆவது வயதில் உயிரிழந்தார். இவர் 350க்கும் மேற்பட்ட படங்களில் இதுவரை நடித்துள்ளார்.


தெலுங்கில் 70களில் தன் தந்தை புகழ்பெற்ற நடிகராக கொடிகட்டிப் பறந்த சூழலில், தன் 4ஆவது வயதில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பு உலகில் காலடி எடுத்து வைத்தார் மகேஷ் பாபு.


தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக தன் தந்தையுடன் இணைந்து படங்களில் நடித்த மகேஷ் பாபு, ’ராஜகுமாருடு’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து ஹிட் படங்களைக் கொடுத்து டோலிவுட்டில் ஸ்டார் நடிகராக உருவெடுக்கத் தொடங்கினார்.






சகோதரர் ரமேஷ் பாபு


டோலிவுட்டின் பிரபல தயாரிப்பாளராக விளங்கிய இவரது அண்ணன் ரமேஷ் பாபுவும் முதலில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமானார். தொடர்ந்து 1987 - 1997 ஹீரோவாக பல படங்களில் நடித்த அவர் 2004ஆம் ஆண்டு முதல் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தார்.


மகேஷ் பாபு நடித்த தூக்குடு, அர்ஜூன், அதிதி ஆகிய படங்களின் தயாரிப்பாளர் ரமேஷ் பாபுதான். இந்த ஆண்டு ஜனவரி மாதம் ரமேஷ் பாபு சிறுநீரகப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.


தாய் உயிரிழப்பு


தொடர்ந்து மகேஷ் பாபுவின் தாய் இந்திரா தேவி வயதுமூப்பின் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதம் உயிரிழந்தார். இவர்களைத் தொடந்து மகேஷ் பாபுவின் தந்தை இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.


ஒரே ஆண்டில் அடுத்தடுத்து மூன்று குடும்ப உறுப்பினர்களை மகேஷ் பாபு இழந்திருப்பது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.